முகநூல் பக்கத்தில் பாமக நிறுவனர் மருத்துவர் இராமதாசு அய்யா எழுதும்‘சுக்கா, மிளகா, சமூகநீதி?’ தொடர்-7
(ஒரு மிக நீண்ட நெடிய வரலாறு)
6. ஓபிசி இட ஒதுக்கீட்டுக்காக மண்டல் செய்த தியாகம்!
இந்தியாவில் பிற்படுத்தப்பட்ட வகுப்பு மக்களை அடையாளம் கண்டு அவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்குவதற்காக அமைக்கப்பட்ட பிந்தேஸ்வரி பிரசாத் மண்டல் தலைமையிலான இரண்டாவது பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தில் அவர் தவிர 4 உறுப்பினர்கள் இடம் பெற்று இருந்தனர். திவான் மோகன்லால், ஆர்.ஆர்.போலே, தீனபந்து சாகு, கே.சுப்பிரமணியம் ஆகியோர் தான் அந்த 4 உறுப்பினர்கள் ஆவர். இவர்களில் கே.சுப்பிரமணியம் தமிழ்நாட்டை சேர்ந்தவர். மீனவர் வகுப்பைச் சேர்ந்த இவர், ராம் மனோகர் லோகியாவின் சோசலிசக் கட்சியில் தீவிரமாக பணியாற்றியவர் ஆவார்.
தீனபந்து சாகு என்ற உறுப்பினர் உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டதை அடுத்து 1979ஆம் ஆண்டு நவம்பர் 5&ஆம் நாள் உறுப்பினர் பதவியிலிருந்து விலகிக் கொண்டார். அவருக்கு பதிலாக எல்.ஆர். நாயக் என்பவர் புதிய உறுப்பினராக நியமிக்கப்பட்டார். காகா கலேல்கர் ஆணையத்தில் பிராமணர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பு உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டிருந்தனர். ஆனால், மண்டல் ஆணையத்தில் முதலில் நியமிக்கப்பட்ட ஐவருமே பிற்படுத்தப்பட்ட வகுப்புகளைச் சேர்ந்தவர்கள் தான் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்களில் பதவி விலகிய தீனபந்து சாகு என்பவருக்கு பதிலாக நியமிக்கப்பட்ட நாயக் என்பவர் மட்டும் தான் பட்டியலினத்தைச் சேர்ந்தவர் ஆவார்.
மண்டல் ஆணையத்தின் முதல் கூட்டம் 1979&ஆம் ஆண்டு மார்ச் 21&ஆம் நாள் தில்லியில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பிரதமர் மொரார்ஜி தேசாய் கலந்து கொண்டு ஆணையத்தின் பணிகளைத் தொடங்கி வைத்தார். அதைத் தொடர்ந்து ஆணையத்தின் களப்பணிகள் தொடங்கின. முதலில் பின்தங்கிய நிலையில் உள்ள சமுதாயங்களை அடையாளம் காண வேண்டும் அல்லவா? அதற்காக 11 காரணிகள் உருவாக்கப்பட்டு, சமுதாயங்களின் பிற்படுத்தப்பட்ட தன்மையை அடையாளம் காண்பதற்கான அளவீட்டு கருவியாக பயன்படுத்தப்பட்டன. அந்த 11 காரணிகளின் விவரம் வருமாறு:
சமூகக் காரணிகள்:
1. சமூக அடிப்படையில் பின்தங்கியவர்களாக பிறரால் கருதப்படும் சாதிகள்.
2. வாழ்வாதாரத்திற்காக உடல் உழைப்பை நம்பியிருக்கும் சமுதாயங்கள்.
3. கிராமப்புறங்களில் மாநில சராசரிக்கும் கூடுதலாக 25% பெண்களும், 10% ஆண்களும், நகரப் பகுதிகளில் 10% பெண்களும், 5% ஆண்களும் 17 வயதுக்கும் குறைவான வயதிலும் திருமணம் செய்து கொள்ளும் சமுதாயங்கள்.
4. வேலைக்கு செல்லும் பெண்களின் அளவு மாநில சராசரியை விட குறைந்தது 25% குறைவாக உள்ள சமுதாயங்கள்
கல்வி
5. 5 முதல் 15 வயது வரை உள்ள பள்ளிக்கு செல்லாத குழந்தைகளின் எண்ணிக்கை மாநில சராசரியை விட 25% அதிகமாக உள்ள சாதிகள்.
6. 5 முதல் 15 வயது வரை உள்ள பள்ளிக்கு செல்வதை பாதியில் நிறுத்திய குழந்தைகளின் எண்ணிக்கை மாநில சராசரியை விட 25% அதிகமாக உள்ள சாதிகள்.
7. பத்தாம் வகுப்பு முடித்தவர்களின் எண்ணிக்கை மாநில சராசரியை விட 25% குறைவாக உள்ள சாதிகள்.
பொருளாதாரக் காரணிகள்
8. குடும்ப சராசரி சொத்து மதிப்பு மாநிலத்தின் சராசரி சொத்து மதிப்பை விட குறைந்தது 25% குறைவாக உள்ள சமுதாயங்கள்.
9. கூரை வீடுகளில் வசிக்கும் குடும்பங்களின் எண்ணிக்கை மாநில சராசரியை விட குறைந்தது 25% அதிகமாக உள்ள சமுதாயங்கள்.
10. 50 விழுக்காட்டுக்கும் கூடுதலான குடும்பங்கள் குடிநீர் எடுப்பதற்காக அரை கிலோமீட்டர் தூரத்துக்கும் கூடுதலாக பயணிக்க வேண்டியுள்ள சமுதாயங்கள்.
11. நுகர்வுக் கடனை பெறும் குடும்பங்களின் எண்ணிக்கை மாநில சராசரியை விட குறைந்தது 25% கூடுதலாக உள்ள சமுதாயங்கள்.
பின்தங்கிய மக்களை அடையாளம் காண்பதற்காக கல்வி, சமூக, பொருளாதாரம் சார்ந்த 11 காரணிகள் எடுத்துக் கொள்ளப்பட்டாலும், அவற்றுக்கு சமமான மதிப்பெண் தரப்படவில்லை. சமூகம் சார்ந்த 4 காரணிகளுக்கும் தலா 3 மதிப்பெண்கள் வழங்கப்பட்டன. கல்வி சார்ந்த 3 காரணிகளுக்கும் தலா இரு மதிப்பெண்களும், பொருளாதாரம் சார்ந்த 4 காரணிகளுக்கும் தலா ஒரு மதிப்பெண்ணும் வழங்கப்பட்டன.
இந்த கணக்கெடுப்புக்காக பயன்படுத்தப்பட்ட 4 பொருளாதார காரணிகளும் பொதுவான பொருளாதார காரணிகள் அல்ல. இந்த 4 பொருளாதார காரணிகளும் சமூகம், கல்வியில் ஏற்பட்ட பின்னடைவு காரணமாக ஏற்பட்ட ஏழ்மையை சுட்டிக்காட்டும் காரணிகள் தான். இந்த பொருளாதார காரணிகளை கணக்கில் கொள்வது என்பது பொருளாதார அடிப்படையில் பின்தங்கிய சமூகங்களுக்கு இட ஒதுக்கீடு வழங்குவது அல்ல.... மாறாக, சமூக ரீதியிலும், கல்வியிலும் பின்தங்கிய சமுதாய மக்கள் பொருளாதார நிலையிலும் கடுமையாக பின்தங்கியுள்ளனர் என்பது தான் இதன் பொருள் ஆகும்.
சமூகம், கல்வி மற்றும் பொருளாதாரம் சார்ந்த காரணிகளுக்கு அளிக்கப்பட்ட மொத்த மதிப்பெண்கள் 22 ஆகும். ஒவ்வொரு சாதியிலும் இந்த காரணிகளை பொருத்திப் பார்க்கும் போது எந்தெந்த சமூகங்கள் 50 விழுக்காட்டுக்கும் கூடுதலான, அதாவது 11-க்கும் கூடுதலான மதிப்பெண்களை பெறுகின்றனவோ, அந்த சமூகங்களை பின்தங்கிய சமூகங்கள் என்று தீர்மானிக்கவும், மற்ற சமுதாயங்களை முன்னேறிய சமுதாயங்களாக தீர்மானிக்கவும் மண்டல் ஆணையம் முடிவு செய்தது.
கள ஆய்வு
மக்களின் பிற்படுத்தப்பட்ட தன்மையை தீர்மானிப்பதற்கான அளவீட்டுக் காரணிகள் முடிவு செய்யப்பட்ட பின்னர் ஆணையம் இந்தியா முழுவதும் மாநில வாரியாக சென்று மக்களை சந்தித்து கருத்துகளை கேட்டது. மற்றொரு பக்கம் ஒவ்வொரு மாநிலத்திலும் சில குறிப்பிட்ட பகுதிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு அங்குள்ள மக்களின் சமூக, கல்வி, பொருளாதார நிலைகள் ஆய்வு செய்யப்பட்டன.
தமிழ்நாட்டைப் பொருத்தவரை சென்னையில் அடையாறு ஆல்காட் குப்பம், விவேகானந்தபுரம், செரியன் நகர், குப்புசாமி நகர், ஜி.டி. நாயுடு நகர் ஆகிய 5 இடங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு கணக்கெடுப்புகள் நடத்தப்பட்டன. சென்னைக்கு வெளியே செங்கல்பட்டு, வட ஆற்காடு, தென்னாற்காடு, தருமபுரி, சேலம், கோவை, நீலகிரி, திருச்சி, தஞ்சாவூர், மதுரை, இராமநாதபுரம், திருநெல்வேலி, கன்னியாகுமரி, புதுக்கோட்டை, பெரியார் ஆகிய மாவட்டங்களில் தலா ஒரு வட்டம் தேர்ந்தெடுக்கப்பட்டு, அந்த வட்டத்தில் உள்ள இரு கிராமங்கள் அடையாளம் காணப்பட்டு அங்குள்ள மக்களின் சமூக, கல்வி, பொருளாதார நிலைமை ஆய்வு செய்யப்பட்டது.
குழு ஆய்வு
பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு இடஒதுக்கீடு வழங்குவது குறித்து ஆணைய உறுப்பினர்கள் குழு முதன்முதலில் 1979&ஆம் ஆண்டு மே மாதம் 14&ஆம் தேதி சண்டிகர் யூனியன் பிரதேசத்தில் கருத்துக் கேட்பு மற்றும் கலந்தாய்வு கூட்டங்களைத் தொடங்கியது. அடுத்து ஹரியானா மாநிலத்தில் மே மாதம் 15 மற்றும் 16 ஆம் தேதிகளில் ஆணையத்தின் கலந்தாலோசனைகள் நடைபெற்றன. மூன்றாவதாக தில்லி யூனியன் பிரதேசத்தில் கருத்துகள் கேட்கப்பட்டன.
தொடர்ந்து பிகார், கேரளம் ஆகிய இடங்களில் ஆய்வு செய்த மண்டல் ஆணையக் குழு, 1979&ஆம் ஆண்டு ஜூன் மாதம் 26&ஆம் தேதி முதல் 30&ஆம் தேதி வரை தமிழ்நாட்டில் பல்வேறு தலைவர்களை சந்தித்து கருத்துகளை கேட்டறிந்தது. தஞ்சாவூரில் நடைபெற்ற கருத்துக் கேட்புக் கூட்டத்தின் போது ஆணையம் அமைக்கப்படுவதற்காக போராடியவர்களில் ஒருவரான வே. ஆனைமுத்து கலந்து கொண்டு வாய்மொழிச் சாட்சியம் அளித்தார்.
தொடர்ந்து புதுச்சேரி மாநிலத்தில் 28.06.1979 அன்று ஆணையம் கருத்துக் கேட்புக் கூட்டம் நடத்தியது. அதன்பின்னர் கர்நாடகம், சிக்கிம், ஒதிஷா, மேற்குவங்கம், மாராட்டியம், கோவா, டாமன்-டையூ, ஆந்திரா, மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், உத்தரப்பிரதேசம், குஜராத், தாத்ரா நாகர் ஹாவேலி, ஹிமாலய பிரதேசம், ஜம்மு-காஷ்மீர் ஆகிய மாநிலங்களில் மண்டல் ஆணையம் ஆய்வு நடத்தியது. பின்னர் 1980-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 4-ஆம் தேதி முதல் 8-ஆம் தேதி வரை மத்தியப் பிரதேசத்தில் இரண்டாம் கட்ட ஆய்வு நடத்தியது. அத்துடன் மண்டல் ஆணையம் மாநில வாரியான ஆய்வுக் கூட்டங்களை நிறைவு செய்தது. அனைத்து மாநிலங்களிலும் ஒரு கட்ட ஆய்வு நடத்திய ஆணையம் பிகார், மத்தியப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் மட்டும் இரு கட்டங்களாக ஆய்வு மேற்கொண்டது.
நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் கலந்தாய்வு
பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இட ஒதுக்கீடு குறித்து இரு கட்டங்களாக நாடாளுமன்ற உறுப்பினர்களின் கருத்துகளையும் மண்டல் ஆணையம் கேட்டது. முதல் கட்டமாக 1979-ஆம் ஆண்டு மார்ச் 31 முதல் மே மாதம் 8-ஆம் தேதி வரை நாடாளுமன்ற உறுப்பினர்களின் கருத்துகளை ஆணையம் கேட்டறிந்தது. இந்தக் கூட்டத்தில் தமிழ்நாட்டிலிருந்து வாழப்பாடி ராமமூர்த்தி (தருமபுரி), கே.டி.கோசல்ராம்( திருச்செந்தூர்) ஆகிய காங்கிரஸ் உறுப்பினர்கள், குழந்தைவேலு (திருச்செங்கோடு), பி.வி.பெரியசாமி (கிருஷ்ணகிரி) ஆகிய அதிமுக உறுப்பினர்கள் என மொத்தம் 4 உறுப்பினர்கள் கலந்து கொண்டு கருத்துகளை தெரிவித்தனர்.
1980-ஆம் ஆண்டு ஜூலை ஒன்றாம் தேதி முதல் 4&ஆம் தேதி வரை இரண்டாம் கட்ட கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் தமிழகத்திலிருந்து ஆர்.வி.சுவாமிநாதன்( சிவகங்கை), அன்பரசு (செங்கல்பட்டு) ஆகிய காங்கிரஸ் உறுப்பினர்களும், அர்ஜுனன் ( தருமபுரி), கந்தசாமி (திருச்செங்கோடு), சி.பழனியப்பன்(சேலம்) ஆகிய திமுக உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.
நாடாளுமன்ற உறுப்பினர்களுடனான கலந்தாய்வுக் கூட்டங்களில் பிகார், உத்தரப்பிரதேசம், மராட்டியம் உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து ஏராளமான உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். ஆனால், சமூக நீதிக்கு புகழ்பெற்ற தமிழ்நாட்டிலிருந்து மிகக்குறைந்த எண்ணிக்கையிலான உறுப்பினர்கள் மட்டுமே கலந்து கொண்டனர்.
மண்டலுக்கு நெருக்கடியும், தியாகமும்
பிற்படுத்தப்பட்ட தன்மை கொண்ட மக்களை அடையாளம் கண்டு, அவர்களுக்கு இட ஒதுக்கீடு அளிப்பது குறித்து அறிக்கை அளிக்க மண்டலுக்கு 31.12.1979 வரை ஒராண்டு மட்டுமே அவகாசம் அளிக்கப்பட்டிருந்தது. பின்னர் 1980 ஆம் ஆண்டு மார்ச் மாதம் வரை 3 மாதம் கால நீட்டிப்பு வழங்கப்பட்டது. ஆனால், அதற்குள் ஜனதா அரசு கவிழ்ந்து, அடுத்து நடைபெற்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றது. 14.01.1980-இல் இந்திரா காந்தி புதிய பிரதமராக பொறுப்பேற்றார். அப்போது மண்டல் ஆணைய பணிகள் நிறைவடையவில்லை. கூடுதலாக ஓராண்டு காலநீட்டிப்பு வழங்கப்பட்டால் மட்டுமே அறிக்கை தயாரிப்பு பணிகளை முடிக்க முடியும் என்று ஆணையத் தலைவர் மண்டல் கருதினார்.
காகா கலேல்கர் குழு அறிக்கையை செயல்படுத்த விடாமல் தடுத்தவர்களில் முக்கியமானவரான இந்திரா காந்தி, ஜனதாக் கட்சி அரசால் அமைக்கப்பட்ட தமது ஆணையத்திற்கு கால நீட்டிப்பு வழங்க மாட்டார்; அதனால் மண்டல் ஆணையத்தின் ஓராண்டு கால பணிகள் வீணாகி விடும் என்று நினைத்தார். காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தால் மட்டும் தான் ஆணையத்திற்கு கால நீட்டிப்பு பெற முடியும் என்று தொலைநோக்குப் பார்வையுடன் அவர் சிந்தித்தார். அதன்படி அவர் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். அதைத் தொடர்ந்து முதலில் ஜூன் மாதம் வரையிலும், பின்னர் திசம்பர் மாதம் வரையிலும் மண்டல் ஆணையத்திற்கு கால நீட்டிப்பு வழங்கப்பட்டது. ஆணையத்தின் கடைசி பணி நாளான 31.12.1980-இல் மத்திய உள்துறை அமைச்சரான கியானி ஜெயில்சிங்கிடம் பிந்தேஸ்வரி பிரசாத் மண்டல் இரண்டாவது பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் அறிக்கையை தாக்கல் செய்தார்.
நாளை....
மண்டல் ஆணைய அறிக்கையும், அங்கீகாரம் அளித்த ஜெயில்சிங்கும்!
No comments:
Post a Comment