டூ - வீலர் பெட்டியை உடைத்து 2 லட்சம் ரூபாய் கொள்ளை
திருவேற்காடு, டூ - வீலரில் உள்ள பெட்டியை உடைத்து, 2 லட்சம் ரூபாய் திருடியவர்களை, போலீசார் கைது செய்தனர்.அம்பத்துார், மண்ணுார் பேட்டை, நேரு நகரைச் சேர்ந்தவர், மோகன், 50; வெல்டர். இவர், நேற்று முன்தினம், திருவேற்காடு அடுத்த வேலப்பன்சாவடியில் உள்ள தனியார் நிறுவனத்தில், இருசக்கர வாகனத்தில் வேலைக்கு சென்றார்.அப்போது, அங்குள்ள வங்கியில், தன் மகளின் திருமணத்திற்காக, நகைகள் அடமானம் வைத்து, 2 லட்சம் ரூபாய் பெற்றார். அதை, தன் இருசக்கர வாகன இருக்கையின் கீழ் உள்ள பெட்டியில் வைத்து பூட்டி, வேலைக்கு சென்றார்.வேலை முடிந்து திரும்பியபோது, இருசக்கர வாகனம் உடைக்கப்பட்டு, 2 லட்சம் ரூபாய் திருடப்பட்டிருந்தது.இது குறித்து, திருவேற்காடு போலீசார், அதே பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில், வேலை செய்து கொண்டிருந்தவர்களிடம் விசாரித்தனர். இதில், வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த ராஜசேகர், 20, கரண் குமார் சகா, 19, ஆகியோர் சிக்கினர்.இவர்கள், மோகனை நோட்டமிட்டு பணத்தை திருடி, அருகில் உள்ள பள்ளத்தில் மறைத்துவிட்டு, பின் வழக்கமான பணியில் ஈடுபட்டது தெரிய வந்தது.அவர்களை கைது செய்த போலீசார், 2 லட்சம் ரூபாயை பறிமுதல் செய்தனர்.திருட்டு நடந்த, 24 மணி நேரத்தில், பணத்தை மீட்டு கொடுத்த போலீசாருக்கு, மோகன் கண்ணீர் மல்க நன்றி தெரிவித்தார்.
No comments:
Post a Comment