பேராசையிடமிருந்து இயற்கையைக்
காக்க ஓணம் உறுதி ஏற்போம்! - மருத்துவர் இராமதாசு அய்யா
மக்களை நேசித்த மன்னன் மகாபலி மீண்டு மக்களைச் சந்திக்க வரும் திருவோணம் திருநாளைக் கொண்டாடும் உலகம் முழுவதுமுள்ள மலையாளம் பேசும் மக்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
வாமணனால் பாதாளத்தில் தள்ளப்பட்ட மகாபலி மன்னன் ஆண்டுக்கு ஒருமுறை வெளியே வந்து தமது மக்களைச் சந்திக்கச் செல்லும் நிகழ்வு தான் திருவோணம் திருநாளாக கொண்டாடப்படுகிறது. மன்னன் மகாபலியின் வருகை மக்களுக்கு மகிழ்ச்சியை அளிக்கும் நிகழ்வாகும். மகாபலி மன்னன் மக்களை எப்போதும் மகிழ்ச்சியாக வைத்திருந்தார். ஆனால், இயற்கை அவர்களை ஆட்டிப்படைக்கிறது.
கடந்த சில ஆண்டுகளாகவே கடவுளின் பூமி என்று போற்றப்படும் கேரளத்தில் ஓணம் திருநாள் உவப்பானதாக இல்லை. கடந்த இரு ஆண்டுகளாகவே தொடர் வெள்ளத்தால் கேரளம் பாதிக்கப்பட்டு இருந்தது. இந்த ஆண்டாவது ஓணம் திருநாள் மகிழ்ச்சியானதாக இருக்கும் என்று மலையாள சகோதர, சகோதரிகள் எதிர்ப்பார்த்துக் காத்திருந்த வேளையில், இந்த ஆண்டும் இயற்கை கொடூரத் தாக்குதல்களை நிகழ்த்தியுள்ளது. கொரோனா என்ற கொடிய வைரசிலிருந்து விரைவாகவே விடுபட்டு வந்த கேரளம், இப்போது மீண்டும் கொரோனா தாக்குதலால் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறது. அதுமட்டுமின்றி, கோழிக்கோடு விமான விபத்து, மூணாறு நிலச்சரிவு ஆகியவையும் கேரளத்தை கடுமையாக பாதித்துள்ளன.
கொரோனா தாக்குதலாக இருந்தாலும், மூணாறு நிலச்சரிவாக இருந்தாலும் அவை இயல்பாக நடந்து விடவில்லை. மனிதர்களாகிய நாம் பேராசையுடன் இயற்கை மீது நடத்திய தாக்குதலின் எதிர்வினை தான் இந்த பேரழிவுகள் ஆகும். மகாபலியிடம் மூன்றடி மண் கேட்ட வாமணன் ஓரடியில் மண்ணுலகை ஆக்கிரமித்துக் கொண்டதைப் போல, பேராசை பிடித்த நாடுகள் இயற்கை மதிக்காமல் சுற்றுச்சூழல் மீது நடத்தும் தாக்குதலின் விளைவாக ஏற்பட்டவை தான் கொரோனா போன்ற புதிய வைரஸ்களின் உருவாக்கமும், நிலச்சரிவுகளும் ஆகும். புவியிலிருந்து வெளியாகும் பசுமை இல்ல வாயுக்களின் விளைவாக புவி வெப்பமயமாதல் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. அது கட்டுப்படுத்தப்படாவிட்டால், இன்னும் மோசமான இயற்கைச் சீற்றங்கள் ஏற்படக்கூடும்; அது கடவுளின் பூமியை கடுமையாக தாக்கக்கூடும்.
இயற்கையை நேசிக்க வேண்டும்; இயற்கையைக் காப்பாற்ற வேண்டும்; இயற்கையை வளர்த்தெடுக்க வேண்டும் என்ற எண்ணம் மட்டும் பொதுமக்கள் மத்தியில் வந்து விட்டால் சீற்றங்களுக்கு இடமில்லாமல் போய்விடும். எனவே, மகாபலி மன்னன் மக்களைக் காண வரும் ஓணம் திருநாளைக் கொண்டாடும் இந்த நாளில் இயற்கையை மீட்டு உலகைக் காக்க அனைவரும் உறுதியேற்றுக் கொள்ள வேண்டும். ஓணம் திருநாள் மக்களுக்கு மகிழ்ச்சி, வளம், அமைதி, அன்பு, பாதுகாப்பான எதிர்காலம் உள்ளிட்ட அனைத்தையும் வழங்க வேண்டும் என்று மீண்டும் ஒருமுறை வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
No comments:
Post a Comment