கி.ரா. விருது பெற்ற நடுநாட்டு கவிஞர் கண்மணி குணசேகரனுக்கு - மருத்துவர் இராமதாசு அய்யா வாழ்த்துகள்!
கிராமப்புற வாழ்க்கை முறையை ரத்தமும் சதையுமாக பதிவு செய்யும் பாட்டாளி சொந்தம், நடுநாட்டு கவிஞர் கண்மணி குணசேகரனுக்கு கரிசல் இலக்கியத்தின் தந்தை கி.இராஜநாராயணன் பெயரால் உருவாக்கப்பட்டுள்ள கி.ரா. விருது வழங்கப்பட்டிருப்பதை அறிந்து மிகுந்த மகிழ்ச்சி அடைந்தேன். அதிலும் குறிப்பாக கி.ரா. விருது உருவாக்கப்பட்ட ஆண்டில் முதல் விருதே நமது கண்மணிக்கு தான் வழங்கப்பட்டிருக்கிறது என்பது கூடுதல் சிறப்பு. அவருக்கு எனது வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
அண்மையில் 98-ஆவது பிறந்தநாளைக் கொண்டாடிய பெரியவர் கி.இராஜநாராயணன் தான் வட்டார வழக்கு மொழிகளை முதன்முதலில் ஆய்வு செய்தவர். கிராமத்து வழக்கு சொல் அகராதியை முதன்முதலில் தொகுத்தவரும் அவர் தான். அவரைப் பெருமைப்படுத்தும் வகையில் தான் கோவையைச் சேர்ந்த விஜயா பதிப்பத்தின் விஜயா வாசகர் வட்டத்தின் சார்பில் கி.ரா. விருது உருவாக்கப்பட்டுள்ளது. இந்த விருது பெறும் படைப்பாளர்களுக்கு ரூ.1 லட்சம் பரிசுத்தொகையும் அறிவிக்கப்பட்டிருந்தது.
தமிழில் கிராமப்புற வழக்கில் கதை, கவிதைகள், புதினங்கள் ஆகியவற்றை படைப்பவர்களுக்கு இவ்விருது வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. முதல் கி.ரா. விருது கவிஞர் கண்மணி குணசேகரனுக்கு வழங்கப்பட்டுள்ளது. நடுநாட்டு மக்களின் கிராமப்புற வாழ்க்கை முறையை ரத்தமும், சதையுமாக பதிவு செய்தததற்காகவும், நடுநாட்டுச் சொல்லகராதியை உருவாக்கியதற்காகவும் குணசேகரனுக்கு கி.ரா விருது வழங்கப்பட்டிருக்கிறது.
விருது வழங்கும் நிகழ்ச்சியில் நடுநாட்டுச் சொல்லகராதியை படைப்பதற்காக பட்ட பாடுகள் குறித்து கண்மணி கூறியதைக் கேட்ட சிறப்பு விருந்தினர்களில் ஒருவரான நடிகர் சிவக்குமார், விருதுக்கான பரிசுத் தொகையை ரூ.2 லட்சமாக உயர்த்தி வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டாராம். அதையேற்று பரிசுத் தொகை வழங்கும் சக்தி மசாலா நிறுவனமும் பரிசுத் தொகையை ரூ.2 லட்சமாக உயர்த்தி வழங்கியிருக்கிறது. இனி வரும் ஆண்டுகளிலும் பரிசுத் தொகை ரூ.2 லட்சமாக இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது கவிஞர்களுக்கு செய்யப்படும் மரியாதை ஆகும்.
கவிஞர் கண்மணி குணசேகரன் குறித்தும், அவரது படைப்புகள் குறித்தும் நான் சொல்லித் தான் மற்றவர்கள் அறிந்து கொள்ள வேண்டும் என்பதில்லை. எனது அன்பையும் பாராட்டுகளையும் பெற்ற அவரது படைப்புகள் உலகம் முழுவதும் உள்ள தமிழர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன.
கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தை அடுத்த மணக்கொல்லை கிராமத்தில் மிகவும் சாதாரணமானக் குடும்பத்தில் பிறந்து 10-ஆம் வகுப்பும், அதைத் தொடர்ந்து ஐ.டி.ஐ. தொழிற்பயிற்சி படிப்பும் மட்டுமே படித்தவர் அவர். தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் விருத்தாசலம் பணிமனையில் எந்திரவியலாளராக பணியாற்றி வரும் அவரது படைப்புகள், உலகின் தலைசிறந்த கவிஞர்களையும் வியக்க வைக்கும். அவரது படைப்புகளை படித்து நான் மிகவும் வியந்திருக்கிறேன்.
கண்மணி குணசேகரன் இதுவரை தலைமுறைக் கேடயம் உள்ளிட்ட 7 கவிதைத் தொகுப்புகளையும், வாடாமல்லி உள்ளிட்ட 5 சிறுகதைத் தொகுப்புகளையும், வந்தாரங்குடி, அஞ்சலை உள்ளிட்ட நான்கு புதினங்களையும், இவற்றுக்கெல்லாம் மகுடம் வைத்தது போன்று நடுநாட்டுச் சொல்லகராதியையும் படைத்துள்ளார். அவரது படைப்புகளைப் படிக்கும் போது கடலூர் மாவட்டத்தின் ஒரு கிராமத்திற்கு சென்று வாழ்வது போன்றும், அந்த வட்டார மக்களின் மகிழ்ச்சி, துன்பம் உள்ளிட்டவற்றை பகிர்ந்து கொள்வது போன்ற உணர்வு ஏற்படும். இது தான் கண்மணி குணசேகரன் படைப்புகளின் வெற்றி ஆகும்.
அவரது நடுநாட்டுச் சொல்லகராதியை கடந்த 2007-ஆம் ஆண்டு சென்னை பாரதியார் நினைவு இல்லத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நான் தான் வெளியிட்டேன். நெய்வேலி நிலக்கரி சுரங்கத்துக்கான நிலம் கொடுத்தவர்களுக்கு நீதி பெற்றுத் தருவதற்காக எனது தலைமையில் நடத்தப்பட்ட போராட்டங்கள் குறித்து விளக்கும் வந்தாரங்குடி புதினத்தையும் விருத்தாசலத்தில் நான் தான் வெளியிட்டேன்.
சுந்தர ராமசாமி விருது, தமிழக அரசின் தமிழ் வளர்ச்சித்துறை விருது, கனடா தமிழ் இலக்கியத் தோட்டத்தின் புனைவு விருது, கலைஞர் பொற்கிழி விருது உள்ளிட்ட ஏராளமான விருதுகளையும் நமது கண்மணி பெற்றுள்ளார். அவரது நெடுஞ்சாலை புதினம் திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தில் பாடமாக வைக்கப்பட்டுள்ளது. உயிர் தண்ணீர் சிறுகதை அண்ணாமலை பல்கலைக்கழகத்திலும், அஞ்சலை புதினம் கோழிக்கோடு பல்கலைக்கழகத்திலும் பாடநூலாக இடம் பெற்றிருந்தன. அவரது படைப்புகளை முனைவர் மற்றும் இளம் முனைவர் பட்டத்துக்காக பலரும் ஆய்வு செய்து வருகின்றனர்.
கண்மணி குணசேகரன் போன்ற படைப்பாளிகளுக்கு கிடைக்கும் விருதுகள் தமிழ் வளர்ச்சிக்கும், தமிழ்ச் சமூக வளர்ச்சிக்கும் செய்யப்படும் முதலீடுகள் ஆகும். நமது சமூகம் மானமுடனும், உணர்வுடனும், உயிர்ப்புடனும் வாழ்வதற்கு தேவையான விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் மேலும் பல படைப்புகளை பாட்டாளி கவிஞர் கண்மணி குணசேகரன் படைக்க வேண்டும்; மேலும் பல விருதுகளை வெல்ல வேண்டும் என்று வாழ்த்துகிறேன். இதைப் படிப்பவர்களும் வாழ்த்துங்கள்!
No comments:
Post a Comment