நீட் அச்சம்: தருமபுரி மாணவர் ஆதித்யா மறைவுக்கு - மருத்துவர் இராமதாசு இரங்கல்
நீட் தேர்வு அச்சம் காரணமாக தருமபுரியைச் சேர்ந்த ஆதித்யா என்ற மாணவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார் என்ற செய்தி அறிந்து மிகுந்த வேதனை அடைந்தேன். மதுரை மாணவி ஜோதி ஸ்ரீ துர்கா தற்கொலை செய்து கொண்ட அதிர்ச்சி விலகும் முன்பே ஆதித்யா தற்கொலை செய்து கொண்ட துயரச்செய்தி இதயத்தை இரணமாக்குகிறது; எனது கண்கள் இரண்டும் குளமாகின்றன.
மீண்டும், மீண்டும் சொல்லத் தேவையில்லை.... ஆதித்யாவின் உயிரையும் நீட் தேர்வு தான் கொடூரமாக பறித்திருக்கிறது. நீட் தேர்வு மாணவர்களைக் கொல்லும் பலி பீடமாக மாறியிருக்கிறது. இந்த உண்மை ஒட்டுமொத்த தமிழகத்திற்கும் தெரிகிறது. ஆனால், யாருடைய காதுகளில் விழ வேண்டுமோ, அவர்கள் காதுகளில் இன்னும் விழாதது தான் மிகுந்த வேதனை அளிக்கிறது. 2010-11 ஆம் ஆண்டில் நீட் தேர்வை காங்கிரஸ் & திமுக கூட்டணி அரசு அறிமுகப்படுத்தியது. அதை இப்போதைய அரசு வலிந்து திணித்துக் கொண்டிருக்கிறது. தமிழக மக்களின் உணர்வுகளை மத்திய அரசு புரிந்து கொள்ள வேண்டும்.
நீட் தேர்வு அச்சத்தால் தற்கொலை செய்து கொண்ட மாணவன் ஆதித்யாவின் குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். மாணவச் செல்வங்களை நான் மன்றாடிக் கேட்டுக் கொள்வதெல்லாம் நீட் தேர்வு என்பது வாழ்க்கையின் தொடக்கம் தான்.... அது வாழ்க்கையின் முடிவாக மாறி விடக் கூடாது. நீட் தேர்வில் தோல்வியடைந்து விட்டாலோ, மருத்துவப் படிப்பை படிக்க முடியவில்லை என்றாலோ, அதனால் எதிர்காலம் இருண்டு விடாது. மருத்துவப் படிப்பைத் தவிர ஏராளமான உயர்கல்வி வாய்ப்புகள் உள்ளன. நம்மால் இயன்ற வரை நீட் தேர்வில் சிறப்பாக செயல்படுவோம்; வாய்ப்பு கிடைக்காத பட்சத்தில் சாத்தியமான வேறு வாய்ப்புகளை தேடிக் கொள்ளலாம். நீட் தேர்வில் தோல்வியடைந்து விட்டால், வாழ்க்கையில் அனைத்தும் முடிவடைந்து விட்டதாக நினைத்து வாழ்க்கையை முடித்துக் கொள்ளும் செயல்களில் ஈடுபடக்கூடாது.
அதேபோல் பெற்றோரும் எதார்த்தத்தை புரிந்து நடந்து கொள்ள வேண்டும். முடிந்த வரை குழந்தைகளை ஊக்குவிக்க வேண்டும். மருத்துவக் கல்வி என்பது உயர்கல்வியில் ஒரு வாய்ப்பு தானே, அது மட்டுமே வாய்ப்பு இல்லை என்பதை குழந்தைகளுக்கு உணர்த்தி நல்வழி காட்ட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
No comments:
Post a Comment