பட்டப்பகலில் நடுரோட்டில் வைத்து கல்லூரி மாணவி சுட்டுக்கொலை : மனதை அதிர வைக்கும் சிசிடிவி காட்சிகள்.
ஹரியானாவில் கல்லூரி முடிந்து வீடு திரும்பிக் கொண்டிருந்த 21 வயது மாணவி ஒருவர், மர்ம நபரால் துப்பாக்கியால் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஃபரிதாபாத்தில் உள்ள பாலப்கர் பகுதியில் அமைந்துள்ள கல்லூரி ஒன்றில் பயின்று வந்தவர் நிகிதா தோமர். இவர் வழக்கம் போல, கல்லூரியை முடித்து விட்டு, தனது தோழியுடன் வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது, காரில் வந்த இரு மர்ம நபர்களில் ஒருவன், கையில் துப்பாக்கியுடன் நிகிதாவை மறித்து காரில் கடத்திச் செல்ல முயன்றுள்ளார். அப்போது, அவனிடம் இருந்து தப்பியோட முயன்றுள்ளார். இதையடுத்து, பின்னே நோக்கி ஓடிச் சென்ற அந்த நபர், கையில் வைத்திருந்த துப்பாக்கியால், மாணவியின் தலையில் சுட்டுள்ளார்.
இந்த சம்பவத்தில் தலையில் பலத்த காயமடைந்த அவர், அங்கேயே சுருண்டு விழுந்து உயிரிழந்தார். இதைத் தொடர்ந்து, அந்த நபர்கள் அங்கிருந்து, வந்த காரிலேயே அதிவேகமாக தப்பியோடிச் சென்றனர். பட்டப்பகலில் மாணவியை துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்த சம்பவம் அங்கிருந்த பொதுமக்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
பின்னர், இது குறித்து தகவலறிந்த போலீசார், சடலத்தை மீட்டு வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்த நிலையில், இளம்பெண்ணை சுட்டுக் கொன்ற நபரை கைது செய்துள்ளனர். கொலைக்கான காரணம் குறித்து இன்னமும் தெரியவரவில்லை. இதனிடையே, நிகிதா சுட்டுக்கொல்லப்பட்ட சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது.
No comments:
Post a Comment