சிலப்பதிகாரம் அறிவோம்! - மருத்துவர் இராமதாசு அய்யா
36. கட்டுரை
(இது வஞ்சிக்காண்டத்தில் சாற்றப்பட்ட காதைகளின்
வகையும் அதன் கருத்தும் உரைக்கப்படுவதாயிற்று.)
முடியுடை வேந்தர் மூவ ருள்ளும்
குடதிசை ஆளும் கொற்றம் குன்றா
ஆர மார்பில் சேரர்குலத்து உதித்தார்
அறனும், மறனும், ஆற்றலும், அவர்தம்
பழவிறல் மூதூர்ப் பண்புமேம் படுதலும்,
விழவு மலி சிறப்பும் விண்ணவர் வரவும்,
ஒடியா இன்பத்து அவர் உறை நாட்டுக்
குடியின் செல்வமும், கூழின் பெருக்கமும்,
வரியும் குரவையும், விரவிய கொள்கையின்
புறத்துறை மருங்கில் அறத்தொடு பொருந்திய
மறத்துறை முடித்த வாய்வாள் தானையொடு
பொங்கு இரும் பரப்பின் கடல்பிறக்கு ஓட்டிக்
கங்கைப் பேர் யாற்றுக் கரை போகிய
செங்குட் டுவனோடு ஒருபரிசு நோக்கிக்
கிடந்த வஞ்சிக் காண்டம்முற் றிற்று.
தெளிவுரை:
சேர சோழபாண்டிய மன்னர்கள் மூவருள்ளும் மேற்கில் உள்ள
நாட்டினை ஆட்சிபுரியும் பெருமையும் மணிமாலை அணிந்த
மார்பும் உடைய சேரர் குலத்தில் தோன்றியவர்கள் ஆறாம், வீரம்,
ஆற்றல் உடையவர்கள் பழமைமேவும் பெருமையுடைய
வஞ்சிமாநகரில் விழாக்கள் சிறப்புடன் விளங்குவன. தேவர்கள்
வருகையும், குறைவில்லாத இன்பத்துடன் விளங்கும் நாட்டு
மக்களின் செல்வச் செழிப்பும் தனிச்சிறப்புடையன. அங்கு
விளையும் உணவும் வளமையின் பெருக்கமும் கானல் வரியும்,
குன்றக் குரவையும்கலந்தபாடல்களும் ஆடல்களும் புறத்
திணைக்கு உரிய அறத்தின் பாற்படுவன. மக்கள் வீரம் விளங்க
வாள் ஏந்திப் படையோடு சென்று கடல் கடந்தும், கங்கையைக்
கடந்தும் வெற்றிகொண்ட புகழ்ச் செய்தியும் பெரும்பரிசாக
அமையப் பெற்று விளங்கும் வஞ்சிக் காண்டம் நிறைவுற்றது.
No comments:
Post a Comment