வீரத்தின் விளைநிலம் தமிழகம். வீர,தீரம்,ஈரம்,பேராண்மை மிக்கவர்கள் இளைஞர்கள்.சிங்க நிகர் இளைஞர் சக்தி அளவிடற்கரியது. இளைஞர் சக்தி ஆக்கப்பூர்வமாய் மேம்பட வழி வகுப்போம். துணை நிற்போம் - பாமக தலைவர் ஜி.கே.மணி
தமிழனின் ரத்தத்தில் ஊறி ஒவ்வொரு நரம்பிலும் ஓடுகிறது வீரம். நம் பண்பாட்டில் முக்கிய இடம் வகிக்கும் வீரம், எல்லா வரம்பையும் மீறி தமிழன் என்னும் அடையாளத்தை மட்டும் வைத்து தமிழர் இனத்தை ஒன்றிணைக்கும் ஒரு உன்னத உணர்வாகும். இப்படிப்பட்ட வீரத்தை சோதித்து, காளைகளையும் காளைப்போன்ற தமிழர் இன இளைஞர்களையும் ஒரே களத்தில் வைத்து விளையாடும் ஒரு பண்பாடு வழக்கம் உண்டு.வேங்கையையும் வேல்கொண்டு வீழ்த்தும் நம் இளைஞர் சக்தி.இளைஞர் சக்தி ஆக்கப்பூர்வமாய் மேம்பட வழி வகுப்போம். துணை நிற்போம்.
பல்லவ மன்னர்களின் வீரம், படைத்திறன்,ஆட்சிவீரத்திலும் யாருக்கும் குறைந்தவர்களில்லை, மொத்த தமிழினமும் களப்பிரர்களிடம் அடிமைபட்டிருந்த போது அதிலிருந்து மீட்டதில் பெரும் பங்கு பல்லவர்களுக்கு. மாமல்லபுரம், காஞ்சிபுரம் கோவில்கள் எல்லாம் அவர்களின் கட்டிட கலைக்கான சான்றுகள்,மாமல்லபுர குகைக் கோயில்கள் சிற்பங்கள் உலகின் தலை சிறந்த கட்டிட கலைக்கான சான்றுகள்.
தமிழ் நாட்டுக் கவிகள் எஞ்ஞான்றும் படைத்திறத்தையும் கொடைத் திறத்தையும் பாராட்டிப் பாடுவர். "பேராண்மையும் ஊராண்மையும் உடையவர் மேலோர்; அவரே புகழத் தக்கவர். வீரமும் ஈரமும் அற்றவர் கீழோர். அன்னாரைப் பாடுதல் கவிதைக்கு இழுக்கு; நாவிற்கு அழுக்கு" என்பது அவர் கொள்கை.
வீரமும் ஈரமும்-ஔவையாரும் செல்வரும்:
புலமையுலகத்தில் ஔவையாருக்குத் தனிப்பெருமை உண்டு. "ஔவை வாக்குத் தெய்வ வாக்கு" என்று கருதப் பட்டது. ஆதலால், அரசரும் செல்வரும் அவர் வாயால் வாழ்த்துப் பெற ஆசைப்பட்டார்கள்; ஒருநாள் ஔவையார் ஒரு சிற்றூரின் வழியாகச் சென்றுகொண்டிருந்தார். அவ்வூர்ச் செல்வர் இருவர் அவரிடம் போந்து, "அம்மையே உமது வாக்கால் எம்மையும் பாடுக" என்று வேண்டி நின்றார்.
வசைப் பாட்டு:
அவ்விருவரையும் நன்றாகத் தெரிந்தவர் ஔவையார். வீரத்திற்கும் அவருக்கும் வெகு தூரம். போர்க்களத்தின் அருகே அவர் போனதில்லை. ஈரமும் இரக்கமும் அவர் மனத்தை எட்டிப் பார்த்ததில்லை. இத்தகைய பதடிகள் பாட்டுப் பெற ஆசைப்பட்டது கண்டு ஔவையார் உள்ளத்துள்ளே நகைத்தார்; அருகே நின்ற இருவரையும் குறுநகையுடன் நோக்கி, "செல்வச் சேய்களே! என் பாட்டு வேண்டும் என்று கேட்கின்றீர்களே! உம்மை நான் எப்படிப் பாடுவேன்? போர்க்களத்தை நீங்கள் கண்ணால் கண்டதுண்டா? வறுமை வாய்ப்பட்ட அறிஞர் வாய் விட்டுரைப்பதைச் செவியால் கேட்டதுண்டா? எவரேனும் உம்மால் எள்ளளவு நன்மையேனும் இதுவரையில் பெற்ற துண்டா? எட்டாத மரத்தில் எட்டிக்காய் பழுத்தாற் போன்றது உம்மிடம் உள்ள செல்வம்" என்று வசைபாடி அவ்விடம் விட்டு அகன்றார். செல்வர் இருவரும் தருக்கிழந்து தாழ்வுற்றனர்.
தமிழன் சீர்மை:
தமிழன் என்றோர் இனம் உண்டு; தனியே அதற்கொரு திறம் உண்டு. அத்திறம் முன்னாளில் தலை சிறந்து விளங்கிற்று. "மண்ணும் இமையமலை எங்கள் மலையே" என்று மார் தட்டிக் கூறினான் தமிழன். "கங்கையும் காவிரியும் எங்கள் நதியே" என்று இறுமாந்து பாடினான் தமிழன். "பஞ்சநதி பாயும் பழனத் திருநாடு எங்கள் நாடே" என்று நெஞ்சம் நிமிர்ந்து பேசினான் தமிழன்.
ஆண்மை நிறைந்தவன் தமிழன். அந்நாளில் அவன் வாலாண்மையால் பகைவரை வென்றான்; தாளாண்மை யால் வன்னிலத்தை நன்னிலமாக்கினான்; வேளாண்மை யால் வளம் பெருக்கினான். இது மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்னே வாழ்ந்த தமிழன் நிலை இன்றும் வடநாட்டில் அவன் கை வண்ணம் மண்ணுள் மூழ்கி மறைந்து கிடக்கின்றது. இந்தியாவின் எல்லைப்புறத்திலுள்ள பெலுச்சியர் நாட்டிலே தமிழ் இனத்தைச் சேர்ந்த மொழியொன்று இன்றளவும் வாழ்கின்றது.
தென்னாடு - தமிழ்நாடு
உயர்ந்தவர் தாழ்வர்; தாழ்ந்தவர் உயர்வர். இஃது உலகத்து இயற்கை. அந்த முறையில் படிப்படியாகத் தாழ்ந்தான் தமிழன்; வளமார்ந்த வட நாட்டை வந்தவர்க்குத் தந்தான்; தென்னாட்டில் அமைந்து வாழ்வானாயினான். அந் நிலையில் எழுந்தது, "வடவேங்கடம் தென்குமரி ஆயிடைத் தமிழ் கூறும் நல்லுலகம்" என்ற வாசகம்.
இமையப் படையெடுப்பு ஆயினும், இமையமலை தன் மலை என்பதைத் தமிழன் மறந்தானல்லன். படையூற்றம் உடைய தமிழ் மன்னர் பலர் வடநாட்டின்மீது படையெடுத்தனர்; வீரம் விளைத்தனர். வெற்றி பெற்றனர். சேர, சோழ,பாண்டியர் ஆகிய தமிழ் வேந்தர் மூவர்க்கும் அப்பெருமையிலே பங்குண்டு.
விற்கொடி யேற்றம் சேரகுல மன்னருள் சாலப் பெருமை வாய்ந்தவன் நெடுஞ்சேரலாதன். அவன் இமையமலை வரையும் படையெடுத்துச் சென்றான்; எதிர்த்த ஆரிய மன்னரை அலற அடித்தான்; சிறை பிடித்தான். இமையமலையில் தனது வில்லுக்கொடியை ஏற்றி, "இமைய வரம்பன்" என்னும் விருதுப் பெயர் கொண்டான். அவன் புகழைப் பாடினார் பொய்யறியாப் பரணர்.
புலிக்கொடி யேற்றம் பழங்காலச் சோழர் குலப் பெருமையெல்லாம் தன் பெருமையாக்க படையெடுத்தான்; தடுப்பார் எவருமின்றி, இமையமலையை அடுத்தான்; விண்ணளாவிய அம் மலையை அண்ணாந்து நோக்கினான்; தன் வேகம் தடுத்தாண்ட அவ் விலங்கலின்மீது சோழ நாட்டு வேங்கைக் கொடியை ஏற்றினான். அவன் பெருமையைச் சிலப்பதிகாரம் பாடிற்று.
வெற்றி வீரனாகத் தமிழ் நாட்டை நோக்கித் திரும்பி வரும் பொழுது சோழ மன்னனை வச்சிர நாட்டு மன்னன் வரவேற்று முத்துப் பந்தலைத் திறையாக அளித்தான். மகத நாட்டரசன் தடுத்துப் போர் புரிந்து தோற்றான்; எட்டுத் திசையும் புகழ் பெற்ற வளவனுக்குப் பட்டிமண்டபத்தைத் திறையாக இட்டு வசங்கினான். அவந்தி நாட்டு அரசன் முன்னமே நண்பனாதலின், மனம் உவந்து தமிழ் மன்னனை வரவேற்றுத் தோரணவாயில் ஒன்று பரிசாகத் தந்தான். பொன்னாலும் மணியாலும் ஆன்னார் மூவரும் புனைந்து அளித்த அரும் பரிசுகள் பூம்புகார் நகரின் சித்திர மாளிகையில் சிறந்த காட்சிப் பொருள்களாக அமைந்தன. அவற்றைக் கண்டு விம்மிதம் உற்றனர் வீரர் எல்லாம். மீன்கொடி யேற்றம் பாண்டியரது மீனக் கொடியும் இமயமலையில் மிளிர்வதாயிற்று. அக் கொடியேற்றிய மன்னவனைப் "பருப்பதத்துக் கயல் பொறித்த பாண்டியர் குலபதி" என்று பாராட்டினார் பெரியாழ்வார். அவன் வழி வந்த பாண்டியன் ஒருவன், "ஆரியப்படை கடந்த நெடிஞ்செழியன்" என்று சிலப்பதிகாரத்திலே குறிக்கப்படுகின்றான். செருக்களத்தில் ஆரியரை வென்றமையால் செழியன் அச்சிறப்புப் பெயர் பெற்றான் என்பது வெளிப்படை. ஆண்மையும் அருளும் வாய்ந்த அம் மன்னன் மதுரை மாநகரில் அரசு வீற்றிருந்தபோது பாண்டியநாடு பேரும் பெருவாழ்வும் பெற்று விளங்கிற்று. அப் பெருமையை நேரில் அறிந்த அயல் நாட்டான் ஒருவன், "தென்னவன் நாட்டுச் சிறப்பும் செய்கையும் கண்மணி குளிர்ப்பக் கண்டேன்" என்று வாநாரப் புகழ்ந்து வாழ்த்தினான்.
No comments:
Post a Comment