வன்னியர்களுக்கு 20 விழுக்காடு தனி இட ஒதுக்கீடு கோரி போராடுவது ஏன்? - மருத்துவர் இராமதாசு அய்யா
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடப்பாண்டில் நடத்திய முதல் தொகுதி தேர்வுகளில் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் பிரிவில் மொத்தம் 6 துணை ஆட்சியர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். அவர்களில் ஒருவர் கூட வன்னியர் அல்ல என்ற உறுதியான தகவல் நம்பத் தகுந்த வட்டாரங்களில் இருந்து கிடைத்துள்ளது. வன்னியர்களுக்கு 20% தனி இட ஒதுக்கீடு கோரி 10 ஆண்டுகள் போராடி, 21 உயிர்களை பலி கொடுத்தோம். ஆனால், வன்னியர்களுக்கு மட்டும் 20% தனி இட ஒதுக்கீடு வழங்காமல் 108 சாதிகளுக்கு சேர்த்து 20% இட ஒதுக்கீடு வழங்கினார்கள். இது தான் நமக்கு எதிரான சதி.
நாம் போராடி , நாம் 21 உயிர்களை பலி கொடுத்து வாங்கிய இட ஒதுக்கீட்டில் நம்மைத் தவிர மற்ற சமூகங்கள் பயனடைந்து வருகின்றன. நாம் போராடி 20% இட ஒதுக்கீடு வாங்கினாலும் அதனால் நாம் பயனடைந்து விடக் கூடாது என்பதற்காகவே, நம்மை அல்லாமல் 107 சமுதாயங்களையும் சேர்த்து சதி செய்தார்கள். இப்போது துணை ஆட்சியர்களாக தேர்ந்தெடுக்கப்படுபவர்கள் அடுத்த சில ஆண்டுகள் இ.ஆ.ப. (ஐ.ஏ.எஸ்) அதிகாரியாக நிலை உயர்த்தப்படுவர். முதலில் மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்படும் அவர்கள், துறை செயலாளர் பதவி வரை உயர முடியும். அத்தகைய நிலைக்கு நாம் வந்துவிடக் கூடாது என்பதற்காகவே நமக்கான இட ஒதுக்கீட்டில் பிற சமூகங்கள் திணிக்கப்பட்டன.
வன்னியர்களுக்கு மட்டும் 20% தனி இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு இருந்தால் 6 துணை ஆட்சியர் பணிகளும் வன்னியர்களுக்கே கிடைத்திருக்கும். தமிழ்நாட்டில் செயலாளர் நிலையில் 100 அதிகாரிகள் இருந்திருந்தால், அவர்களில் குறைந்தது 20 பேராவது வன்னியர்கள் இருந்திருப்பார்கள். நாம் தொடர்ந்து புறக்கணிக்கப்படும் நிலையை மாற்றி, அனைத்து நிலைகளிலும் குறைந்தது 20% பிரதிநிதித்துவம் பெறும் நிலையை உருவாக்குவதற்காகத் தான் வன்னியர்களுக்கு 20% தனி இட ஒதுக்கீடு கோரி தொடர் போராட்டங்களை அறிவித்திருக்கிறோம்.
அனைத்து சமுதாயங்களே.... அறிவு ஜீவிகளே... எங்கள் கோரிக்கையில் உள்ள நியாயத்தை புரிந்து கொள்ளுங்கள். உண்மையான சமூகநீதிப் போராட்டத்திற்கு ஆதரவு தாருங்கள்!
போராடுவோம்! வெற்றி பெறுவோம்!!
No comments:
Post a Comment