அளவில்லா அன்பையும், சகிப்புத் தன்மையையும் உலகிற்கு போதித்த இயேசு கிறித்துவின் பிறந்தநாளை கிறித்துமஸ் திருநாளாக கொண்டாடும் அனைவருக்கும் - மருத்துவர் இராமதாசு அய்யா வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்.
‘நண்பர்களிடம் மட்டும் அன்பு காட்டினால் போதாது. எதிரிகளிடமும் அன்பு காட்ட வேண்டும். மனதார மன்னிக்க வேண்டும். யாராவது உங்கள்மேல் கோபமாக இருந்தால், உடனடியாக அவரிடம் போய் மன்னிப்பு கேட்க வேண்டும். மற்றவர்கள் உங்களிடம் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்று நினைக்கிறீர்களோ, அதேபோல் நீங்கள் அவர்களிடம் நடந்துகொள்ள வேண்டுமென போதித்தவர் இயேசுபிரான்.
இயேசுபிரான் பிறந்த இடம் ஏழ்மையின் அடையாளம் என்றாலும் கூட, பின்னாளில் அவர் போதித்த போதனைகளும், அவரது வாழ்க்கை நமக்கு உணர்த்திய பாடங்களும் உயர்வின் உச்சங்கள் ஆகும். தமது போதனைகளுக்கு எடுத்துக்காட்டாக தமது வாழ்க்கையை வாழ்ந்த மகான் இயேசுநாதர்.
ஒரு கன்னத்தில் அறைந்தால் மறு கன்னத்தைக் காட்டு எனும் அளவுக்கு சகிப்புத் தன்மையையும், எதிரிகளிடமும் அன்பு காட்டும் தன்மையையும் கொண்டிருந்தவர் இயேசுபிரான். ஆனால், இன்று உலகம் அன்பு பற்றாக்குறையும், வெறுப்பு உபரியும் தான் காணப்படுகிறது. இந்த நோய்களுக்கு சிறந்த மருந்து இயேசுபிரானின் போதனைகள் தான். அந்த மருந்தை அனைவரும் உட்கொள்வது கட்டாயம் ஆகும்.
இயேசுபிரான் விரும்பியதைப் போல முழுவதும் நாட்டில் அமைதியும், மகிழ்ச்சியும் நிலவ வேண்டும்; போட்டி பொறாமைகள் அகல வேண்டும்; ஏழைகளின் துயரங்கள் நீங்க வேண்டும்; உலகம் வளம் பெற வேண்டும். அதை நனவாக்க உழைப்போம் என இயேசுபிரான் அவதரித்த இந்த நன்நாளில் அனைவரும் உறுதி ஏற்போம் என்று கூறி மீண்டும் ஒருமுறை எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
No comments:
Post a Comment