7. இசையின் இசை, தமிழிசை - கர்நாடக இசை ஒப்பீடு! - மருத்துவர் இராமதாசு அய்யா - Agnipuratchi

7. இசையின் இசை, தமிழிசை - கர்நாடக இசை ஒப்பீடு! - மருத்துவர் இராமதாசு அய்யா

Share This

7. இசையின் இசை, தமிழிசை - கர்நாடக இசை ஒப்பீடு! - மருத்துவர் இராமதாசு அய்யா

தமிழிசையையும் கர்நாடக இசையையும் ஒப்பிட வேண்டுமா? என்றால் அதற்கானத் தேவையே இல்லை என்பது தான் எனது நிலைப்பாடாகும்.

ஆனாலும், கர்நாடக இசை  தான் சிறந்த இசை, தமிழிசை என்பது இரண்டாம் நிலை இசை தான்  என்பது போன்ற பொய்யான பரப்புரை திட்டமிட்டு செய்யப்பட்டு வருகிறது. சில நேரங்களில் இதற்கு முக்கியத்தும் கொடுக்கத் தேவையில்லை என்று விலகிச் சென்றால், அதையே காரணம் காட்டி, “தமிழிசையைவிட கர்நாடக இசை சிறப்பானது; வலிமையானது”  என்று விளம்பரம்  தேடிக் கொள்வர். அதனால் தான் ‘‘இசையின் இசை”  தொடரில் இப்படி ஓர் அத்தியாயத்தை எழுதுகிறேன்.

தமிழிசை - கர்நாடக இசை குறித்த ஒப்பீட்டை சுருக்கமாகக் கூற வேண்டுமானால், “கர்நாடக இசையில் உள்ள அனைத்தும் தமிழிசையில் ஏற்கனவே உள்ளவை தான்; கர்நாடக இசையின் சிறப்புகள் அனைத்துமே தமிழிசையில் இருந்து வந்தவை தான்” என்று கூறலாம். இன்னும் சுருக்கமாகக் கூற வேண்டுமானால் தமிழிசை அசல், கர்நாடக இசை அதன் நகல் என்று கூறலாம். இந்தக் கூற்றை மெய்ப்பிக்க ஏராளமான சான்றுகள் உள்ளன.

கீர்த்தனைகள் - சாகித்தியங்கள்

தமிழிசைக்கு வரலாறு உண்டு. கர்நாடக இசைக்கு அத்தகைய வரலாறு இல்லை. தமிழிசையின் காலம் எது என்று ஆய்வு செய்து பார்த்தால், அது 3,000 ஆண்டுகளுக்கும் முந்தையது என்று உறுதியாகக் கூறலாம். ஆனால், கி.பி. பத்தாம் நூற்றாண்டுக்கு முன்பாக கர்நாடக இசை என்ற குறிப்பை எங்கும் காண முடியவில்லை. கி.பி. 14-ஆம் நூற்றாண்டுக்கு பிறகு தமிழ்நாட்டில் நாயக்கர்களும், மராட்டியர்களும் ஆட்சியமைத்த பிறகு தான் தெலுங்கும், சமஸ்கிருதமும் கலந்த கர்நாடக இசை பரவத் தொடங்குகிறது.
தமிழிசைக்கும், கர்நாடக இசைக்கும் இடையிலான இன்னொரு முக்கிய ஒப்பீடு என்னவென்றால், தமிழிசையை அழிக்க வேண்டும் என்று எண்ணி சமணர் காலம் தொடங்கி நாயக்கர்கள்காலம், மராட்டியர்கள்  காலம் வரை பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.

ஆனால், எந்தக் காலத்திலும் தமிழிசையை அழிக்க முடியவில்லை. அதேவேளையில் தெலுங்கும், சமஸ்கிருதமும் கலந்த கர்நாடக இசை தொடக்கக் காலத்திலிருந்தே உயர்த்திப் பிடிக்கப்பட்டு வருகிறது.  அந்த முயற்சி இன்று வரை வெற்றி பெற முடியவில்லை. கர்நாடக இசை என்பது ஒரு குறிப்பிட்ட பிரிவினருக்கான இசையாகவே இன்றளவும் நீடித்து வருகிறது.

கர்நாடக இசைக்கு சாகித்திய சங்கீதம் என்றும் ஒரு பெயர் உண்டு. கர்நாடக இசை என்று கூறுவதை விட சாகித்திய சங்கீதம் என்று கூறினால் இன்னும் மரியாதையாக இருக்கும் என்ற எண்ணத்தில் தான் அவ்வாறு அழைக்கிறார்கள். கர்நாடக இசையில் சாகித்தியங்கள் பாடப்படுவதால் அது சாகித்திய சங்கீதம் என்பது அவர்களின் தரப்பு வாதம். ஆனால், கர்நாடக இசையில் சாகித்தியங்கள் தோன்றியதற்கு எத்தகைய சான்றுகளும் இல்லை. அவை தமிழ் கீர்த்தனைகளின் மறு உருவம் தான் என்பது உறுதி செய்யப்படுள்ள உண்மை.

தமிழிசை மூவர் - கர்நாடக இசை மூவர்

தமிழிசை மூவர் என்றும், சீர்காழி மூவர் என்றும் போற்றப்படும் இசைமேதைகள் முத்துத்தாண்டவர், தில்லைவிடங்கன் மாரிமுத்தாப்பிள்ளை, அருணாச்சல கவிராயர் ஆகிய மூவரும் தான் கீர்த்தனை என்ற புதிய தமிழிசை வடிவத்தை உருவாக்கினர். கி.பி. 16-ஆம் நூற்றாண்டில் முத்துத் தாண்டவர் தொடங்கி 18-ஆம் நூற்றாண்டில் அருணாச்சல கவிராயர் வரை தமிழ் கீர்த்தனைகளை உருவாக்கியதில் முக்கியப் பங்காற்றியவர்கள். பாபநாசம் சிவனும் 18-ஆம் நூற்றாண்டின் இறுதியில் இந்தப் பணியில் தம்மை இணைத்துக் கொண்டார். அதனால் அவரையும் சேர்த்து தமிழிசை நால்வர் என அழைத்தவர்களும் உண்டு.

இன்றைய இசையின் முதன்மைக் கூறுகளாக உள்ள தொகையறா, பல்லவி, அனுபல்லவி, சரணம் அல்லது எடுப்பு, தொடுப்பு, முடிப்பு ஆகியவை கீர்த்தனைகளிலேயே இருப்பதைக் காண முடிகிறது. கீர்த்தனைகள் சுருக்கமாக கிருதி என்றும் அழைக்கப்படுகின்றன. இந்தக் கீர்த்தனைகளில் தமிழ்ச் சொற்களை நீக்கி விட்டு, தெலுங்கு மற்றும் சமஸ்கிருதச் சொற்களை மாற்றி எழுதப்பட்டவை தான்  சாகித்தியங்கள் ஆகும். கர்நாடக சங்கீத மும்மூர்த்திகள் என்று போற்றப்படுகின்ற தியாகராஜ சுவாமிகள், முத்துச்சாமி தீட்சிதர், சியாமா சாஸ்திரிகள் ஆகிய மூவரும் தமிழிசையை அடிப்படையாக வைத்துத் தான் கர்நாடக இசைச் சாகித்தியங்களை உருவாக்கினர். உண்மையில் இவர்களுக்கும் மூத்தவர்கள் தமிழிசை மூவர்கள் தான். ஆனால், தமிழ்க் கீர்த்தனைகள் எனப்படுபவை சாதாரணமானவை போன்றும், அவற்றைக் காப்பியடித்து எழுதப்பட்ட கர்நாடக சாகித்தியங்கள் சிறப்பானவை என்றும் ஒருவகையான தோற்றம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இது வரலாற்று திரிபாகும்.

பதங்கள் - ஸ்வரங்கள்

கர்நாடக இசை வழக்குகளை ஆழமாக ஆய்வு செய்யும் போது அவை அனைத்தும் தமிழிசையின் வழக்குகளில் இருந்து உருவாக்கப்பட்டவை என்பதை புரிந்து கொள்ள முடியும். கர்நாடக இசையின் அடிப்படையான ‘‘ச,ரி,க,ம,ப,த,நி’’ கூட தமிழிசை வழக்குகளில் இருந்து தோன்றியவை தான்.

தமிழிசை வழக்கு - கர்நாடக இசை வழக்கு

1. பண்                         - இராகம்

2. தாளம்                 - தாளம்

3. பதம்                         - ஸ்வரம்

4. பதம் ஏழு                 - ஸ்வரம் ஏழு

5. ஆரோசை         - ஆரோகணம்

6. அமரோசை         - அவரோகணம்

7. குரல்                         - ஸ (ஸட்ஜமம்)

8. துத்தம்                 - ரி  (ரிஷபம்)

9. கைக்கிளை         - க  (காந்தாரம்)

10 உழை                 - ம (மத்யமம்)

11. இளி                         - ப  (பஞ்சமம்)

12. விளரி                 - த (தைவதம்)

13. தாரம்                 - நி (நிஷாதம்)

தமிழிசை வழக்குகளில் இருந்து தான் கர்நாடக இசை வழக்குகள் உருவாயின என்பதை எளிதில்  மெய்ப்பித்து விடலாம். குரல், துத்தம், கைக்கிளை, உழை, இளி,விளரி, தாரம் ஆகியவை தான் தமிழிசையின் ஏழு பதங்கள். இவை அனைத்தும் யாழ் என்ற இசைக்கருவியிலிருந்து பிறந்தவை எனக் கூறப்படுகிறது. பிங்கல நிகண்டு என்ற முற்கால தமிழ் அகராதியில் 7 பதங்களைக் குறித்தும் விளக்கப்பட்டிருக்கின்றன.

“குரலே துத்தம் கைக்கிளை உழையே இளியே
விளரி தாரம் என்றிவை ஏழும் யாழின்
இசைகெழு நரம்பே என்பது பிங்கல நிகண்டு”

பிங்கல நிகண்டு எனப்படும் அகராதி நூல் கி.பி. பத்தாம் நூற்றாண்டில் சோழர்கள் காலத்தில் பிங்கல முனிவரால் எழுதப்பட்டது. இந்த நூல் எழுதப்பட்ட போது கர்நாடக இசை என்ற ஒன்று தோன்றியிருக்கவில்லை.
தமிழிசையின் ஏழு பதங்களின் ஒலியும், கர்நாடக இசையின் ஏழு ஸ்வரங்களின் ஒலியும் ஒன்று தான்.  ஏழு ஸ்வரங்களின் இசையும் யாழ் இசைக்கருவியிலிருந்து தான் பிறந்தன என்பதும் உறுதியாகியுள்ளது. இந்த சான்றுகளின் வாயிலாக கர்நாடக இசையும், தமிழிசையும் வேறு வேறல்ல... அதே நேரத்தில் கர்நாடக இசைக்கு மூலமாக இருப்பது தமிழிசை தான் என்பதை எவ்வித ஐயமும் இல்லாமல் புரிந்து கொள்ள முடியும்.

பண்கள் - இராகங்கள்

கர்நாடக இசையின் ஸ்வரங்கள் மட்டுமின்றி இராகங்களும் தமிழிசையின் பண்களில் இருந்து சில மாற்றங்களைச் செய்து உருவாக்கப்பட்டவை தான். அவற்றின் விவரம் வருமாறு:

தமிழ்ப்பண்                       - கர்நாடக இராகம்

1.  நட்டப்பாடை               - நாட்டை

2.  கொல்லி                       - நௌரோஸ்

3.  பியந்தைக்காந்தாரம்

4.  காந்தாரம்

5.  கொல்லிக் கௌவானம்

6.  கௌசிகம்               - பைரவி

7.  யாழ்முரி               - அடானா

8.  நட்டராகம்               - பந்துவராளி

9.  சாதாரி

10. தக்கராகம்                - காம்போதி

11. தக்கேசி

12. புறநீர்மை                - பூபாளம்

13. அந்தாளிக் குறிஞ்சி    - சியாமா

14. பழந்தக்கராகம்         - சுத்தசாவேரி

15 பழம்பஞ்சுரம்        - சங்கராபரணம்

16. செவ்வழி                - யதுகுல காம்போதி

17. காந்தார பஞ்சமம்       - கேதார கௌளை

18. இந்தளம்                - நாத நாமக்கிரியை

19. சீகாமரம்

20. குறிஞ்சி                        - ஹரிகாம்போதி

21. செந்துருத்தி                 - மத்யமாவதி

22. பஞ்சமம்                - ஆகிரி

23. மேகராகக்குறிஞ்சி     - நீலாம்பரி

24. வியாழக்குறிஞ்சி       - சௌராஷ்டிரம்

25. சாளராபாணி        - எதுவும் இல்லை

26. மோகனம்                - எதுவும் இல்லை

தமிழிசையின் பதங்களுக்கும், கர்நாடக இசையின் ஸ்வரங்களுக்கும் இடையே பெரிய அளவில் எத்தகைய வேறுபாடுகளும் இல்லை. அதேநேரத்தில் தமிழிசையின் பண்களுக்கும், கர்நாடக இசையின் இராகங்களுக்கும் குறிப்பிடத்தக்க வகையில் வேறுபாடுகள் உள்ளன.

நேரத்திற்கான பண்கள்

கர்நாடக இசை இராகங்களுடன் ஒப்பிடும் போது தமிழிசையின் பண்களுக்குச் சில கூடுதல் சிறப்புகள் உள்ளன. காலையில் பாடுவதற்கு சில பண்கள், மாலையில் பாடுவதற்கு சில பண்கள் என தமிழிசையில் பிரித்து வைத்திருக்கிறார்கள். அதுமட்டுமின்றி, எல்லா நேரத்திலும் பாடுவதற்கான பண்களும் உள்ளன.

புறநீர்மை, காந்தாரம், பியந்தைக் காந்தாரம், கௌசிகம், இந்தளம், திருக்குறுந்தொகை, தக்கேசி, காந்தார பஞ்சமம், பஞ்சமம் ஆகியவை காலையில் பாடுவதற்கு உகந்த பண்கள் ஆகும்.

தக்கராகம், பழந்ததக்க ராகம், சீகாமரம், கொல்லி, கொல்லிக் கௌவானம், திருநேர்ச்சை, திருவிதானம், வியாழக் குறிஞ்சி, மேகராகக் குறிஞ்சி, குறிஞ்சி, அந்தாளிக் குறிஞ்சி ஆகிய பண்கள் மாலையில் பாடுவதற்கு  உகந்தவை.

எல்லா காலத்திலும் பாடுவதற்கு ஏற்ற பண்கள் செவ்வழி, செந்துருத்தி, திருத்தாண்டகம் ஆகியவையாகும். காலையிலும், மாலையிலும் மக்களின் மனநிலை எப்படி மாறுபடும் என்பதை உணர்ந்து அதற்கேற்ற வகையில் தமிழ்ப்பண்கள் படைக்கப்பட்டிருக்கின்றன என்பது இங்கே குறிப்பிடத்தக்கதாகும்.

கர்நாடக இசையைப் பொறுத்தவரை இராகங்கள் நேரத்திற்கு ஏற்றவாறு வகைப்படுத்தப்படவில்லை. தமிழிசை அனைத்து நிகழ்வுகளுக்கும், நேரங்களுக்கும் உகந்த வகையில் பாடப்படும் சிறப்பு கொண்டவை ஆகும்.
அதனால் தான் தமிழிசை இசை மேடைகளைக் கடந்து மக்களிடையே பரவலாகச் சென்றடைந்துள்ளது. ஆனால், கர்நாடக இசை பெரும்பாலும் இறைவழிபாட்டுக்காகவே பயன்படுத்தப்பட்டு வருகிறது. அதனால் இசை அரங்குகளைக் கடந்து கர்நாடக இசை வெளியுலகில் பரவவில்லை. கர்நாடக இசையை விட தமிழிசை தொன்மையானது  என்பது மட்டுமின்றி, மக்களின் நேசத்தையும், தோழமையையும், ஆதரவையும் பெற்றது ஆகும். இதுவே எனது ஒப்பீடு!

நாளை....

தமிழிசை மூவர்!
                            *******

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages