8. இசையின் இசை தமிழிசை மூவர்! - மருத்துவர் இராமதாசு அய்யா
தமிழிசை, சங்க காலத்திற்கு முந்தையது. அது குறைந்தது 3,000 ஆண்டுகளுக்கு முன்பே தழைத்தோங்கி வளர்ந்து இருந்தது. எவ்வளவு வளர்ந்த இசையாக இருந்தாலும், அடுத்தடுத்து வளர்ச்சி இருக்கும் என்பது தானே இயல்பு. தமிழிசையும் இரு கட்டத்தில் சிறப்பான வளர்ச்சியை அடைந்தது. முதலாம் வளர்ச்சி என்பது ஏழாம் நூற்றாண்டில் தொடங்கி 13&ஆம் நூற்றாண்டு வரையிலான பக்தி இலக்கிய காலத்தின் ஓர் அங்கமான பதிக காலம். இந்தக் காலத்தில் தான் தேவாரம், திருவாசகம், நாலாயிர திவ்ய பிரபந்தம் உள்ளிட்ட நூல்கள் எழுதப்பட்டன. இவை 10 வரிகளைக் கொண்ட பதிகங்களாக படைக்கப்பட்டன. இவை பண்களுடன் எழுதப்பட்ட தமிழிசைப் படைப்புகள் ஆகும். பதிகங்கள் வடிவிலான படைப்புகள் தமிழிசையை அடுத்த நிலைக்கு கொண்டு சென்றன என்றால் அதில் மறுப்பதற்கு எதுவும் இல்லை.
தமிழிசையின் அடுத்த பரிணாம வளர்ச்சி நடைபெற்றது 16-ஆம் நூற்றாண்டு முதல் 18-ஆம் நூற்றாண்டு வரையிலான காலமாகும். உண்மையில் அது நாயக்கர்கள், மராட்டியர்களின் ஆட்சியில் தமிழிசை நசுக்கப்பட்டு தெலுங்கு மற்றும் சமஸ்கிருதம் கலந்த கர்நாடக இசை ஊக்குவிக்கப்பட்டு வந்த காலம். ஒரு வகையில் அந்த காலத்தை தமிழிசையின் இருண்டகாலம் என்று தான் தமிழிசை ஆர்வலர்கள் அழைத்தனர்.
ஆனாலும், இருளின் நடுவே ஒளி தோன்றுவதைப் போல நாயக்கர்கள் மற்றும் மராட்டியர்களின் ஆட்சி நடைபெற்ற இருண்ட காலத்தில் தான் தமிழிசைக்கு புதிய ஒளியாய் கீர்த்தனைகள் இயற்றப்பட்டன. அத்தகைய கீர்த்தனைகள் தமிழிசையை அதற்கு அடுத்த நிலைக்கு கொண்டு சென்றன. இத்தகைய பெருமை மிக்க கீர்த்தனைகளை மிகச்சிறப்பாக எழுதியவர்கள் முத்துத்தாண்டவர், தில்லைவிடங்கன் மாரிமுத்தாப்பிள்ளை, அருணாச்சல கவிராயர் ஆகிய தமிழிசை மூவர் தான். கீர்த்தனைகள் வாயிலாக தமிழுக்கும், தமிழிசைக்கும் அவர்கள் செய்த பங்களிப்பு என்பது ஈடு இணையற்றது; போற்றுதலுக்கு என்றும் உரியது.
முத்துத் தாண்டவர்
தமிழிசை மூவர்களில் மூத்தவர் முத்துத் தாண்டவர். கர்நாடக சாகித்தியங்களின் நகல் இவரது தமிழிசை கீர்த்தனைகள் என்னும் அசலில் இருந்து தான் எடுக்கப்பட்டன. அந்த வகையில் கர்நாடக இசையின் முன்னோடியும் இவர் தான்.
இவர் கீர்த்தனைகளில் பல்லவி, அனுபல்லவி, சரணம் என்ற பகுதிகளைப் பிரித்துக் கொடுத்திருக்கிறார். பரதநாட்டியத்தில் பாடி ஆடுவதற்கு பொருத்தமான சிறிய பாடல்களை இவர் இயற்றியுள்ளார். அந்த வகையில் முத்துத்தாண்டவரை நாம் முன்னமே குறிப்பிட்டதைப் போல கர்நாடக இசையின் பிதாமகன் என்று அழைக்கலாம்.
முத்துத் தாண்டவர் ஒருங்கிணைந்த தஞ்சாவூர் மாவட்டம் சீர்காழியில் 16-ஆம் நூற்றாண்டில் பிறந்தவர்என்ற அளவில் மட்டும் தான் தகவல்கள் தெரிகின்றனவே தவிர, அவர் பிறந்த ஆண்டு துல்லியமாகத் தெரியவில்லை. 1525-ஆம் ஆண்டில் பிறந்து 1600-ஆம் ஆண்டு வரை வாழ்ந்தார் என்று ஒரு வரலாற்றுப் பதிவு கூறுகிறது.
‘‘அது உண்மையல்ல... முத்துத்தாண்டவர் 80 வயது வரை வாழ்ந்தார்’’ என்று இன்னொரு வரலாறு கூறுகிறது. இவர் இசை வேளாளர் சமுதாயத்தைச் சேர்ந்தவர். அவரது இயற்பெயர் தாண்டவன். அவரது குடும்பத்தினர் சீர்காழியில் உள்ள ஆலயங்களில் நாகஸ்வரம், மிருதங்கம் வாசிக்கும் தொழிலைச் செய்து வந்தனர். அந்த வகையில் இசை அவரது குலத்தொழில் ஆக விளங்கியது.
பக்தி இலக்கியங்களைப் படைத்த ஆழ்வார்கள், நாயன்மார்கள் குறித்து கூறப்படும் வரலாறுகளைப் போன்று முத்துத் தாண்டவர் குறித்தும் சில திருவிளையாடல் வரலாறுகள் கூறப்படுகின்றன. ‘‘தாண்டவருக்கு இளம்வயதில் ஏற்பட்ட நோய் காரணமாக வளர்ச்சி குன்றி, பார்ப்பதற்கு தோற்றப் பொலிவின்றி காணப்படுவார். சிவபாக்கியம் என்பவர் சிவபெருமான் குறித்த பாடல்களை இவருக்குப் பாடிக் காட்டுவார். அதைக் கற்றுக் கொண்டு தாண்டவரும் சிவபெருமான் பற்றிய பாடல்களைப் பாடத் தொடங்கினார். ஒருமுறை உடல்நலம் மிகக்கடுமையாக பாதிக்கப்பட்ட நிலையில், பூட்டப்பட்ட கோயிலுக்குள் மயங்கிக் கிடந்த முத்துத் தாண்டவருக்கு, அவர் முன் உமையவள் சிறுமி வடிவில் தோன்றி உணவும், உடல்நலனும், அருளும், ஆறுதலும் கொடுத்தார். அதன்பிறகு தான் முத்துத் தாண்டவர் கீர்த்தனைகளை அதிக அளவில் எழுதி புகழ் பெற்றார்’’ என்பதே அந்த வரலாறு.
தில்லை நடராசர் கோயிலில்....
முத்துத் தாண்டவருக்கு சிறுமி வடிவில் வந்து அருள்பாலித்த உமையவள், ‘‘தினமும் சிதம்பரம் நடராசர் கோயிலுக்குச் செல்லுங்கள். அங்கு உங்கள் காதுகளில் முதலில் என்ன சொல் கேட்கிறதோ, அந்த சொல்லை முதல் சொல்லாக வைத்து இறைவன் சன்னதியில் பாடுங்கள்’’ என்று அறிவுறுத்தியதாகவும், அதன்படி தில்லை நடராசர் கோயிலில் ஏராளமான பாடல்களை இவர் பாடியதாகவும் ஒரு தரப்பினர் கூறுகின்றனர். ஒருநாள் இவரது செவிகளில் எந்த சொல்லும் கேட்கவில்லை. நெஞ்சம் படபடக்கும் ஓசை மட்டுமே கேட்டது. அந்த ஓசையைக் கட்டுப்படுத்தும் நோக்கத்துடன் ‘‘பேசாதே நெஞ்சமே’’ என்று இவரே கூறுகிறார். அந்த சொல்லை முதல் சொல்லாகக் கொண்டே கீர்த்தனைகளை பாடினார். பின்னர் இவரே ஈவரது சொந்த வார்த்தைகளில் பாடல்களை இயற்றி பாடத் தொடங்கினார்.
முத்துதாண்டவர், நூற்றுக்கணக்கான பாடல்களையும், கீர்த்தனைகளையும் இயற்றியுள்ளார். ஆனால், இவரது பாடல்களில் பெரும்பாலானவை ஆவணப்படுத்தப்படவில்லை. முத்துத்தாண்டவர் இயற்றியவற்றில் 60 பாடல்களும், 25 பதங்களும் கிடைத்திருக்கின்றன. அவருடைய பாடல்கள் ஐந்து நூற்றாண்டுகளுக்கு பிறகு இன்றும் தமிழிசை மேடைகளில் அதிக அளவில் பாடப்படுகின்றன. ‘‘அருமருந்தொன்று தனி மருந்திது’’ எனும் மோகனம் அல்லது காம்போதி ராகப் பாடல், ‘‘பேசாதே நெஞ்சமே’’ எனும் தோடி ராகப் பாடல், ‘‘ காணாமல் வீணிலே’’ என்ற தன்யாசி அல்லது காம்போதியில் பாடப்படும் பாடல் ஆகியவை முத்துத்தாண்டவரின் பாடல்களில் மிகவும் புகழ்பெற்ற பாடல்கள் ஆகும்.
‘‘தெருவில் வாரானோ’’ என்ற கமாஸ் ராகப் பாடல், ‘‘உனை நம்பினேன் ஐயா’’ என்ற கீரவாணி ராகப் பாடல், ‘‘ஈசனே கோடி சூர்ய பிரகாசனே’’ என்ற நளினகாந்தி ராகப் பாடல், ‘‘சேவிக்க வேண்டுமையா’’ என்ற அந்தோளிகா ராகப் பாடல், ‘‘இன்னும் ஒரு தரம்’’ என்ற சிம்ஹேந்திர மத்யமம் ராகப் பாடல் ஆகியவையும் தமிழிசை மேதை முத்துத்தாண்டவர் எழுதிய பாடல்களில் குறிப்பிடத்தக்க பிற பாடல்கள் ஆகும். இந்த பாடல்கள் அனைத்தும் இசை முக்கியத்துவம் வாய்ந்தவை.
அருணாச்சலக் கவிராயர்
தமிழிசை மூவரில் இரண்டாமவர் அருணாச்சலக் கவிராயர் ஆவார். இவரும் ஒருங்கிணைந்த தஞ்சாவூர் மாவட்டத்தின் தில்லையாடி கிராமத்தில் பிறந்தார். இவர் பிறந்த ஆண்டு 1711. கார்காத்த வேளாளர் சமுதாயத்தைச் சேர்ந்தவர் இவர். இளம்வயதிலேயே இசையுடன் கவிதை பாடும் திறன் பெற்று விளங்கிய இவரை, தருமபுர ஆதீனத் தலைவர் பெரிதும் மதித்தார். முத்துத்தாண்டவர் பிறந்த சீர்காழியும், அருணாச்சல கவிராயர் பிறந்த தில்லையாடியும் அருகருகில் உள்ள ஊர்கள் தான். அருணாச்சல கவிராயரின் தமிழிசைத் திறனை மதித்து அவருக்கு பல்வேறு உதவிகளை வழங்கி வந்த தருமபுரம் ஆதீனகர்த்தர், ஒரு கட்டத்தில் கவிராயரை குடும்பத்துடன் சீர்காழிக்கு அழைத்துச் சென்று வீடு ஏற்பாடு செய்து கொடுத்தார். சீர்காழிக்கு இடம்பெயர்ந்தவுடன் சீர்காழி அருணாச்சல கவிராயர் என்று இவர் அழைக்கப்பட்டார்.
சீர்காழியில் தமது தமிழிசைத் திறனை வளர்த்துக் கொள்ளவும், மற்றவர்களுக்கு அதைக் கற்பிக்கவும் இவருக்கு வாய்ப்புகள் கிடைத்தன. ஏராளமான மாணவர்களுக்கு தமிழிசை மற்றும் கீர்த்தனைகளை கற்பித்தார். முத்துத் தாண்டவரால் உருவாக்கப்பட்ட கீர்த்தனைகளை இவர் அடுத்த நிலைக்கு கொண்டு சென்றார்.
அருணாச்சலக் கவிராயரின் பெருமைகளில் குறிப்பிடத்தக்கது இராம நாடகக் கீர்த்தனைகளை இயற்றியது ஆகும். இராமாயணக் கதையை 258 இசைப்பாடல்கள் வாயிலாக நாடக வடிவில் மக்களுக்கு கொண்டு சென்றது அருணாச்சல கவிராயரின் இராம நாடகக் கீர்த்தனைகள் ஆகும்.
கீர்த்தனைகள் வாயிலாக தமிழிசை நாடகத்தை முதன்முதலில் படைத்தவர் அருணாச்சல கவிராயர் தான். கீர்த்தனைகள் வாயிலாக ஒரு கதையை சுவையாக மக்களிடம் கொண்டு சென்று சேர்க்க முடியும் என்பதை இவர் தான் மெய்ப்பித்தார். இது தான் அருணாச்சலக் கவிராயருக்கு இறவாத புகழை பெற்றுத் தந்தது என்றால் அது மிகையில்லை.
வால்மீகியின் இராமயாணம், கம்பரின் இராமாயணம் ஆகியவற்றின் வரிசையில் அருணாச்சல கவிராயரின் இராம நாடகக் கீர்த்தனைகளும் இன்றைக்கு போற்றப்படுகின்றன. திருவரங்கத்தில் உள்ள அரங்கநாதர் ஆலயத்தில் கம்பரின் கம்பராமாயணம் அரங்கேற்றப்பட்டது. பின்னாளில் அதே அரங்கநாதர் ஆலயத்தில் அருணாச்சல கவிராயரின் இராம நாடகக் கீர்த்தனையும் அரங்கேற்றப்பட்டது. கீர்த்தனைகள் மூலம் இராமாயணத்தை இயற்றியதால் அருணாச்சல கவிராயருக்கு இராமாயணக் கவிஞர் என்ற பட்டமும் வழங்கப்பட்டது. இராம நாடகக் கீர்த்தனைகள் இப்போதும் நூல் வடிவில் கிடைக்கின்றன. இராம நாடகக் கீர்த்தனைகள் நூல் பின்னாளில் ‘‘இராம நாடகம்’’, ‘‘சங்கீத இராமாயணம்’’ என்ற பெயர்களிலும் அழைக்கப்பட்டது.
தமிழிசைக்கு மிகப்பெரிய அளவில் பங்களித்த அருணாச்சலக் கவிராயர் அவரது 67&ஆம் வயதில் 1779&ஆம் ஆண்டில் காலமானார். தமிழிசை வரலாற்றை இவரது பெயரைத் தவிர்த்து விட்டு எழுத முடியாது. அப்படி எழுதினால் அது தமிழிசையை இருட்டடிப்பு செய்யும் வேலையாகவே அமையும்.
தில்லைவிடங்கன் மாரிமுத்தாப்பிள்ளை
கடலூர் மாவட்டம் சிதம்பரம் நடராசர் கோயில் கோபுரத்தின் வடகிழக்குத் திசையில் உள்ள தில்லைவிடங்கன் கிராமத்தில் 1712&ஆம் ஆண்டில் பிறந்தவர் மாரிமுத்தாபிள்ளை. இவர் சைவ வேளாளர் சமுதாயத்தைச் சேர்ந்தவர். மாரிமுத்தாப்பிள்ளையும், அருணாச்சல கவிராயரும் ஏறக்குறைய சமகாலத்தவர்கள். இசை நாட்டமும், இறைபக்தியும் கொண்ட குடும்பத்தில் பிறந்த மாரிமுத்தா பிள்ளை இளம் வயதிலேயே சமய தீட்சை பெற்றார். கூடுதலாக தமிழ்க்கல்வி, சமயக்கல்வி, இசைப்பயிற்சி ஆகியவற்றையும் இளம் வயதிலேயே பெற்ற மாரிமுத்தாபிள்ளை, அப்போதே இறைவனைப் போற்றி பல கீர்த்தனைகளை எழுதினார். அவை அக்காலத்திலேயே பெரும் புகழ் பெற்றன.
மாரிமுத்தாபிள்ளையின் நூல்களில் மிகவும் முதன்மைமானது புலியூர் வெண்பா என்பதாகும். ஒருமுறை நினைவிழந்து கிடந்த தமது மூத்த மகனைக் காப்பாற்ற வேண்டி இறைவனை நோக்கி மாரிமுத்தாப்பிள்ளை பாடியது தான் புலியூர் வெண்பா ஆகும்.
மாரிமுத்தாப்பிள்ளை ஏராளமான கீர்த்தனைகளைப் பாடியுள்ளார். ஆனால், அவற்றில் இப்போது 25 கீர்த்தனைகள் மட்டுமே கிடைக்கப் பெற்றுள்ளன.
சிதம்பரேசர் விறலிவிடு தூது, தில்லைப் பள்ளு, சித்திரக் கவிகள், புலியூர்ச் சிங்காரவேலர் பதிகம், தில்லை விடங்கன் ஐயனார் நொண்டி நாடகம், வருணாபுரி ஆதிமூலேசர் குறவஞ்சி, வருணாபுரிப்பள்ளு ஆகியவை மாரிமுத்தா பிள்ளை எழுதிய தமிழிசையை அடிப்படையாகக் கொண்ட நூல்களில் மிகவும் முதன்மையானவை ஆகும்.
திருக்குறளில் வஞ்சப்புகழ்ச்சி அணி இருப்பதைப் போல மாரிமுத்தாப்பிள்ளையும் வஞ்சப்புகழ்ச்சிக் கீர்த்தனைகளைப் படைத்தார். இவை நிந்தாதுதி கீர்த்தனைகள் என்றும் அழைக்கப்பட்டன. ஏசல் கீர்த்தனைகள் என்றும் இந்த வகைக் கீர்த்தனைகளை குறிப்பிடுவார்கள். சிதம்பரம் நடராசரை இகழ்வதைப் போல புகழ்வதாலும், நிந்திப்பதைப் போலத் துதிப்பதாலும் இவரது கீர்த்தனைகள் இவ்வாறு அழைக்கப்பட்டன.
தமிழிசைக்கு சீர்காழி மூவர் செய்த தொண்டு ஈடு இணையற்றதாகும். இவர்களுக்குப் பெருமை சேர்க்கும் வகையில் தமிழக அரசின் சார்பில் இம்மூவருக்கும் சீர்காழியில் நினைவு மண்டபம் அமைக்கப் பட்டுள்ளது.
நாளை....
நாட்டுப்புற இசை!
No comments:
Post a Comment