காலத்தின் அருமை காலம் தவறாமையை கடைபிடிக்க வேண்டும் என்பது தான் - மருத்துவர் இராமதாசு அய்யா விருப்பமும், வேண்டுகோளும்! - Agnipuratchi

காலத்தின் அருமை காலம் தவறாமையை கடைபிடிக்க வேண்டும் என்பது தான் - மருத்துவர் இராமதாசு அய்யா விருப்பமும், வேண்டுகோளும்!

Share This

காலத்தின் அருமை காலம் தவறாமையை கடைபிடிக்க வேண்டும் என்பது தான் - மருத்துவர் இராமதாசு அய்யா விருப்பமும், வேண்டுகோளும்!

காலம் கண் போன்றது என்பது நான் அனுபவித்து, கடைபிடித்து அறிந்த உண்மை ஆகும். காலம் என்பது நமது கைகளில் உள்ள பொக்கிஷம். அதை தவறவிட்டால் திரும்பக் கிடைக்காது. அதனால்  காலம் தவறாமையை நான் அனைத்து தருணங்களிலும் கடைபிடிப்பேன்.

1967-ஆம் ஆண்டில் திண்டிவனம் வட்ட அரசு மருத்துவமனையில் மருத்துவராக பணியில் சேர்ந்தேன். அடுத்த 4 ஆண்டுகளுக்கு, அதாவது 1971 வரை அந்த மருத்துவமனையில் தான் நான் பணியாற்றினேன். அப்போதே மிகவும் கட்டுப்பாடுகளுடன் என்னை நான் வடிவமைத்துக் கொண்டேன். மருத்துவமனைக்குச் செல்ல வணிக வீதி வழியாக கை இழுவை ஊர்தியில் (கை ரிக்சா) தான் பயணிப்பேன். நான் பயணிக்கு கைரிக்சா செல்வதைப் பார்த்து வணிக வீதியில் உள்ளவர்கள் தங்களின் கைக்கடிகாரத்தில் நேரத்தை காலை 7.30 மணி என்று திருத்தி அமைத்துக் கொள்வது உண்டு. அந்த அளவுக்கு காலம் தவறாமையை கடைபிடித்தேன்.

அரசியலுக்கு வந்த பிறகும் கூட, எந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதாக இருந்தாலும், அந்த நிகழ்ச்சி தொடங்குவதாக அறிவிக்கப்பட்டிருந்த நேரத்திற்கு சில நிமிடங்கள் முன்பாகவே சென்று விடுவது தான் எனது வழக்கம் ஆகும்.

நிகழ்ச்சிக்கு நான் சென்று, நிகழ்ச்சி தொடங்க தாமதமாகி இருக்குமே தவிர, நிகழ்ச்சி தொடங்கி சில நிமிடங்கள் தாமதமாக நான் சென்றதாகவோ, என்னால் நிகழ்ச்சி தாமதமானதாகவோ வரலாறு இல்லை. சில நேரங்களில் திருமணத்தை நடத்தி வைக்க ஒப்புக் கொண்ட நேரத்திற்கு நான் சென்றும் கூட, மணமக்கள் தயாராகாததால், பல நிமிடங்கள் நான் காத்திருந்து திருமணத்தை நடத்தி வைத்து வாழ்த்திவிட்டு வந்த நிகழ்வுகளும் உண்டு.

காலத்தின் அருமையை உணர்த்தும் வகையில், எனது மூத்த பெயர்த்தியும், மருத்துவர் அன்புமணி இராமதாசின் மூத்த மகளுமான சம்யுக்தா & எனது பெயரனும் எனது மகள் ஸ்ரீகாந்தி பரசுராமனின் மகனுமான பிரீத்திவன் இணையரின் திருமண நிச்சயதார்த்தம் கடந்த 2014-ஆம் ஆண்டு நடைபெற்ற போது, அந்த நிகழ்வில் பங்கேற்க வந்த அனைவருக்கும் நானும், எனது துணைவியார் சரஸ்வதி அம்மையாரும் இணைந்து துண்டறிக்கை ஒன்றை அச்சிட்டு வழங்கினோம். அதில் இடம் பெற்றிருந்த வாசகங்கள்:

‘‘காலையில் நீங்கள் எழுந்திருக்கிறீர்கள், அட என்ன ஆச்சரியம்! உங்கள் பணப்பையில் மந்திரம் போட்டது போல் உங்கள் வாழ்க்கை பிரபஞ்சத்தின் தசையான 24 மணி நேரம் நிரம்பியிருக்கிறது. அது உங்களுடையது. அது தான் உங்கள் செல்வங்களில் சிறந்த செல்வம். யாராலும் அதை உங்களிடம்  இருந்து எடுத்து விட முடியாது. அதைக் களவாட முடியாது. உங்களுக்கு கிடைப்பதை விட அதிகமாகவோ, குறைவாகவோ யாருக்கும் கிடைக்காது’’ என்பது தான் அந்த வாசகம்.

அந்த வாசகத்தை எழுதியவர் இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த ஆங்கில எழுத்தாளர் அர்னால்ட் பென்னட் ஆவார்.

அந்த துண்டறிக்கையின் கீழ்,‘‘ இந்த துண்டு பிரசுரத்தை நீங்கள் காலையில் எழுந்ததும் பார்க்கும்  இடத்தில் ஒட்டி வைத்து தினமும் காலையில் படித்து விட்டு வேலைகளைத் துவக்குங்கள்’’ என்ற குறிப்பை நான் இடம் பெறச் செய்திருந்தேன்.

அந்த துண்டறிக்கையை படித்த பலரும் அந்த வாசகங்களால் ஈர்க்கப்பட்டு காலம் தவறாமையை கடைபிடிக்கத் தொடங்கியதாக என்னிடமே தெரிவித்துள்ளனர். அதில் எனக்கு மிகவும் மகிழ்ச்சி. அவர்களைப் போலவே மற்றவர்களும் காலம் தவறாமையை கடைபிடிக்க வேண்டும் என்பது தான் எனது விருப்பமும், வேண்டுகோளும்!
                        ***************

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages