"ஈழத்தமிழர்களை இனப்படுகொலை செய்த திமுகவும், ப.சிதம்பரமும் இப்போது நீலிக்கண்ணீர் வடிக்கலாமா?"
காலை உணவுக்கும் மதிய உணவுக்கும் இடையே, மனைவியும் துணைவியுமாக உண்ணாவிரத நாடகம் நடத்தி, ஈழத்தில் போர் நிறுத்தப்பட்டது என்று அறிவித்தார் திமுக முதலமைச்சர் கருணாநிதி! ஆனால், கருணாநிதியின் அறிவிப்பை நம்பி வெளியில் வந்த ஈழத்தமிழர்களை கொத்துக் கொத்தாக கொன்று குவித்தது ராஜபக்ச அரசு!
அன்று ராஜபக்சவுடன் கூட்டு சேர்ந்து ஈழத்தமிழர்களை இனப்படுகொலை செய்த திமுகவும், ப.சிதம்பரமும் தான் இப்போது ஈழத்தமிழர்களுக்காக நீலிக்கண்ணீர் வடித்து நாடகம் ஆடுகின்றனர்.
இந்த நயவஞ்கக் கூட்டம் 2009 ஆம் ஆண்டில் என்ன செய்த கொடூரங்களை இப்போது திரும்பிப்பார்ப்போம்:
27.04.2009 அன்று காலை - இலங்கையில் உடனடியாக போரை நிறுத்தக் கோரி, உண்ணாவிரதப் போராட்டத்தைத் துவக்கினார் அப்போதையை தமிழக முதல்வர் கருணாநிதி!
"தமிழ்நாட்டு மக்கள் சார்பாக, ஈழத் தமிழர்களைப் பாதுகாக்க நான் உண்ணாவிரதம் இருக்கிறேன். நேற்று வரை, போர் நிறுத்தம் பற்றிய தகவல் வரும் என்று எதிர்பார்த்திருந்தேன். விடுதலைப் புலிகள் போர் நிறுத்தம் அறிவித்த பிறகும், சிங்கள அரசு, போரை நிறுத்த முடியாது என்று அறிவித்துள்ளதாக பத்திரிகைகளிலும், தொலைக்காட்சிகள் வாயிலாகவும் அறிந்தேன். ராஜபக்ஷ உயிர் பலி வாங்குவதில் என்னையும் நான் பலியாக்கிக் கொள்கிறேன். இலங்கைத் தமிழர்களுக்கா நான் என்னையே அர்ப்பணித்து உயிரைக் கொடுக்க முன்வந்துள்ளேன்’’ என்றார் கருணாநிதி.
அதே நாள் மதியம் 1 மணியளவில் "இலங்கை பாதுகாப்புக் கவுன்சில் கூட்டத்தில், போரை முடிவுக்குக் கொண்டுவருவதென முடிவு செய்யப்பட்டுள்ளது. இனிமேல் மீட்புப் பணியில் மட்டுமே ராணுவம் ஈடுபடுத்தப்படும் என்று மகிழ்ச்சிகரமான செய்தி வந்துள்ளது. அதனால், உண்ணா நோன்பை முடித்துக் கொள்வதென முடிவு செய்திருக்கிறேன்'' என்று அறிவித்து உண்ணாவிரதத்தை கைவிட்டார் கருணாநிதி.
ஆனால், கருணாநிதி அறிவித்தது முழுக்க முழுக்க பொய்.
'போர் நிறுத்தம்' ஏற்பட்டுவிட்டதாக கருணாநிதி அறிவித்த ஏப்ரல் 27 ஆம் தேதி தொடங்கி, மே மாதம் 19 தேதி வரையில் தான் மிகக் கொடூரமான இனப்படுகொலையை நிகழ்த்தியது இலங்கை அரசு!
ஈழத்தில் படுகொலையான ஒன்றரை லட்சம் தமிழர்களில் மிகப்பெரும்பாலானோர், கருணாநிதியின் போர் நிறுத்த அறிவிப்புக்கு பின்னர் தான் படுகொலை செய்யப்பட்டனர்.
கருணாநிதி இலங்கையில் போர் முடிந்துவிட்டது என்று அறிவித்த அதே ஏப்ரல் 27 இரவே ”இன்றைய தினம்தான் எட்டு இடங்களில் கொத்துக் குண்டுகளைப் போட்டார்கள்” என்று விடுதலைப் புலிகளின் அரசியல் பொறுப்பாளர் நடேசன்பி.பி.சி. வானொலியில் கதறினார் (பின்னர் நடேசனும் கூட சித்தரவதை செய்து கொலை செய்யப்பட்டார்).
அதாவது, கருணாநிதியின் அறிவிப்பைப் பார்த்து ‘பாதுகாப்பான இடத்துக்கு’ அப்பாவி மக்கள் இடம்பெயர்ந்தார்கள். அந்த இடத்தில் குண்டுகள் போடப்பட்டு கொலைகள் நடந்தன. கருணாநிதி சொன்னதை நம்பியதால் தமிழர்கள் உயிரைவிட்டார்கள்.
"நீங்கள் போர் நிறுத்தம் செய்துவிட்டதாகச் சொல்லி உண்ணாவிரத்தத்தை முடித்துவிட்டீர்கள். ஆனால், அன்றைய தினம்கூட குண்டுபோட்டுள்ளார்களே?” என்று பத்திரிகையாளர்கள் கேட்டபோது, ”மழைவிட்டும் தூவானம் தொடர்வது வழக்கம்தான். இதைப் போலத்தான் இலங்கையிலே இப்போதும் தொடரும் விமானத் தாக்குதல்களைக் கருத வேண்டும்” என்று கருணாநிதி வில்லத்தனமாக வசனம் பேசினார்.
கருணாநிதியின் உண்ணாவிரத நாடகத்துக்கு பின்னர் நடைபெற்ற படுகொலை காட்சிகளைப் போர் முடிந்த நான்காவது மாதம் சேனல் 4 வெளிப்படுத்தியது. அந்த வீடியோ காட்சிகள் தமிழக மக்களை அதிரவைத்தன. அப்போதும் ‘முதல்வர்’ கருணாநிதி, ”இந்தக் காட்சிகள் பழையவை. இப்போது எடுக்கப்பட்டவை அல்ல” என்று சொன்னார்.
"உண்மையில் நடந்தது என்ன?"
இலங்கையின் தற்போதைய ஜனாதிபதியாக உள்ள கோத்தபய ராஜபக்ச ”இறுதிப் போர் நடந்த காலகட்டத்தில் இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையே ஒரு குழுவை அமைத்தோம். எங்கள் நாட்டின் சார்பில் நானும் பசில் ராஜபக்ச , லலித் வீரதுங்க ஆகிய மூவரும் இடம்பெற்றோம். இந்தியாவின் சார்பில் எம்.கே.நாராயணன், சிவசங்கர்மேனன், விஜய்சிங் ஆகிய மூவரும் இருந்தார்கள்” என்று சொன்னார்.
போர் நடந்த காலகட்டத்தில் கருணாநிதியை எம்.கே.நாராயணன் எத்தனையோ தடவை சந்தித்தார். இலங்கை போய்விட்டு இங்கே வருவார். அல்லது கருணாநிதியைப் பார்த்துவிட்டு அங்கே போவார். இப்படி எல்லாவற்றையும் கருணாநிதியிடம் சொல்லிவிட்டே, 'ஒன்றரை லட்சம் ஈழத்தமிழர்களை கொன்று ஒழித்தினர்' இலங்கையின் ராஜபக்சே கும்பலும், இந்தியாவின் சோனியா காந்தி கும்பலும்.
"கருணாநிதியின் நாடகம்: தயாநிதி மாறன் கருத்து"
ஈழ இனப்படுகொலை நடைபெற்ற காலத்தின் சென்னையில் பணியில் இருந்த அமெரிக்க துணை தூதர் ஆண்ட்ரூ சிம்கினை சந்தித்த, திமுகவின் தயாநிதி மாறன் "ஈழத்தமிழர் உரிமைக்காக பாடுபடுவதாக கருணாநிதி காட்டிக்கொள்வது எல்லாம் நாடகம். மின்வெட்டுப் பிரச்சினையால் ஏற்பட்டுள்ள மக்களின் கடும் கோபத்திலிருந்து திசை திருப்புவதற்காகவே கருணாநிதி நாடகம் ஆடுகிறார்" என்று தெரிவித்தார். இதனை ஆண்ட்ரூ சிம்கின் அமெரிக்க அரசுக்கு அறிக்கையாக அனுப்பியிருந்தார். பின்னர் விக்கி லீக்ஸ் இணைய தளம் இதனை வெளியிட்டது.
ராஜீவ் காந்தி கொலை செய்யப்பட்டதற்குப் பழி வாங்க வேண்டும், பிரபாகரன் கொல்லப்பட வேண்டும் என்ற எண்ணத்தில் ராகுல் காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் மேலிடத் தலைவர்கள் தீவிரமாக உறுதியாக உள்ளனர் என்றும் தயாநிதி மாறன் கூறியிருந்தார்.
இன்று அதே திமுகவும், அதே ப.சிதம்பரமும் ஈழத்தமிழர் உரிமைக்காக நீலிக்கண்ணீர் வடிக்கின்றனர்.
(குறிப்பு: கருணாநிதியின் உண்ணாவிரத நாடகக் காலத்தில் காங்கிரஸ் - திமுக கூட்டணியில் பாமக அங்கம் வகிக்கவில்லை)
No comments:
Post a Comment