சுக்கா... மிளகா... சமூகநீதி? 16. கர்நாடக இடஒதுக்கீட்டு வரலாறு! - மருத்துவர் இராமதாசு அய்யா - Agnipuratchi

சுக்கா... மிளகா... சமூகநீதி? 16. கர்நாடக இடஒதுக்கீட்டு வரலாறு! - மருத்துவர் இராமதாசு அய்யா

Share This

சுக்கா... மிளகா... சமூகநீதி?
16. கர்நாடக இடஒதுக்கீட்டு வரலாறு! - மருத்துவர் இராமதாசு அய்யா

சமூகநீதியைப் பொருத்தவரை தமிழ்நாட்டைப் போலவே கர்நாடகத்திற்கும் மிக நீண்ட வரலாறு உண்டு. கி.பி. 12-ஆவது நூற்றாண்டுக்கு முன்பிலிருந்தே சமூகக் கட்டமைப்பில் பிற்படுத்தப்பட்ட வகுப்பை முன்னேற்றுவதற்காக பல்வேறு போராட்டங்களும், இயக்கங்களும் கர்நாடகத்தில் ( அந்தக் காலத்தில் மைசூர் மாகாணம்)  முன்னெடுக்கப்பட்டன.

கி.பி.12-ஆவது நூற்றாண்டில் இதற்காக பசவண்ணா தலைமையில் வடக்கு கர்நாடகத்தில் ஏராளமான  போராட்டங்கள் நடத்தப்பட்டன. அதன் பயனாக பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு நவீன கல்வி கிடைத்தது. அதைத் தொடர்ந்து தங்களுக்கு சமூக சமத்துவம், இட ஒதுக்கீட்டு உரிமை உள்ளிட்டவை வழங்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தி கர்நாடகம் முழுவதும் பிற்படுத்தப்பட்ட மக்கள் ஏராளமான போராட்டங்களை முன்னெடுத்து வந்தனர்.

அவற்றின் விளைவாக 1918-ஆம் ஆண்டு மைசூர் மகராஜா ஆட்சிக்காலத்தில் பிராமணர்கள் அல்லாத பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இட ஒதுக்கீடு வழங்குவது குறித்து பரிந்துரைக்க சர் லெஸ்லி மில்லர் ஆணையம் அமைக்கப்பட்டது. அந்த ஆணையம் மைசூர் சமஸ்தான அரசின் வேலைவாய்ப்புகளில் பிராமணர் அல்லாதவர்கள் அனைவரையும் பிற்படுத்தப்பட்ட தன்மை கொண்ட பிற்படுத்தப்பட்ட வகுப்பினராக அறிவித்து, அவர்களுக்கு 25% இட ஒதுக்கீடு வழங்க பரிந்துரை செய்திருந்தது.

அதுமட்டுமின்றி, மில்லர் ஆணையத்தின் பரிந்துரைப்படி மைசூர் மாகாண அரசில் வேலைவாய்ப்புகளுக்க்கான போட்டித் தேர்வு முறை நீக்கப்பட்டது. பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில்  ஒவ்வொரு மாணவரும் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் அவர்களுக்கு வேலைவாய்ப்புகள் வழங்கப்பட்டன.

அந்தக் காலத்தில் கர்நாடத்தில் உயர்சாதியினரின் ஆதிக்கம் தான் மேலோங்கி இருந்தது. அவர்களின் ஆதிக்கத்திற்கு முடிவு கட்ட வேண்டும் என்ற நோக்கத்துடனும்,  பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு கல்வி மற்றும் அதை பெறுவதற்கான இட ஒதுக்கீடு ஆகியவை குறித்து  விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்துடனும் ஏராளமான அமைப்புகள் கர்நாடகத்தில் தொடங்கப்பட்டன.

இந்திய விடுதலைக்குப் பிறகும் கர்நாடகத்தில் சமூகநீதிப் போராட்டங்கள் தொடர்ந்தன. தேசிய அளவில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினரை அடையாளம் கண்டு, இட ஒதுக்கீடு அளிப்பதற்காக 1953-ஆம் ஆண்டில் அமைக்கப்பட்ட காகா கலேல்கர் குழுவின் அறிக்கையை மத்திய அரசு ஏற்றுக் கொள்ளவில்லை. அதனால், மாநில அளவில் பிற்படுத்தப்பட்ட மக்களின் முன்னேற்றத்திற்கான திட்டங்களைச் செயல்படுத்த விரும்பும் மாநில அரசுகள், தாங்களாகவே பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தை ஏற்படுத்திக் கொள்ளலாம் என்று மத்திய அரசு அனுமதித்தது. அதன்பிறகு தான் மாநில அரசுகள் பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தை அமைக்கத் தொடங்கின.

அந்த வகையில் தான்  1960-ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் கர்நாடகத்தில் நாகேகவுடா தலைமையில் பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் அமைக்கப்பட்டது. அந்த ஆணையம் அமைக்கப்பட்டதற்கு முக்கிய காரணமே 1956-ஆம் ஆண்டு முதல் 1959-ஆம் ஆண்டு வரை கர்நாடக அரசின் சார்பில் அறிவிக்கப்பட்ட அனைத்து இட ஒதுக்கீடுகளும் நீதிமன்றங்களால் ரத்து செய்யப்பட்டது தான். 1960-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் அமைக்கப்பட்ட நாகேகவுடா ஆணையம் அடுத்த மாதமே இடைக்கால அறிக்கையை தாக்கல் செய்தது. பின்னர் 1962-ஆம் ஆண்டில் இறுதி அறிக்கையை நாகேகவுடா ஆணையம் சமர்ப்பித்தது.

பிற்படுத்தப்பட்ட வகுப்பினரை இரு பிரிவாக பிரித்த நாகேகவுடா ஆணையம், தொழில்நுட்பக் கல்வியைப் பொறுத்தவரை பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 28 விழுக்காடும், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 22 விழுக்காடும் இட ஒதுக்கீடு வழங்கலாம் என்று பரிந்துரைத்தது. வேலைவாய்ப்புகளைப் பொருத்தவரை பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 21 விழுக்காடும், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 24 விழுக்காடும் இட ஒதுக்கீடு வழங்கலாம் என்பது நாகேகவுடா ஆணையத்தின் பரிந்துரையாகும். அத்துடன் பட்டியலினத்தவருக்கு 15%, பழங்குடியினருக்கு 3% இட ஒதுக்கீடு வழங்கலாம் என்பது நாகே கவுடா ஆணையத்தின் பரிந்துரைகள் ஆகும். அதாவது கல்வியில் மொத்தம் 68% இட ஒதுக்கீடு, அரசு பணிகளில் 63% இட ஒதுக்கீடு என்பதே நாகேகவுடா ஆணையத்தின் அடிப்படையான பரிந்துரை ஆகும்.

இவற்றை  ஏற்றுக்கொண்ட கர்நாடக அரசு, 1962-ஆம் ஆண்டு ஜுலை 31-ஆம் தேதி கல்வியில் 68 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்கி ஆணை பிறப்பித்தது. அந்த நேரத்தில் சுதந்திர இந்தியாவிலேயே அதிக இட ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்திய மாநிலமாக கர்நாடகம் திகழ்ந்தது. ஆனால், வழக்கம் போலவே அந்த இட ஒதுக்கீட்டை எதிர்த்து பாலாஜி என்பவர் கர்நாடக உயர்நீதிமன்றத்திலும், பின்னர் உச்ச நீதிமன்றத்திலும் வழக்குத் தொடர்ந்தார். அந்த வழக்குகளை விசாரித்த இரு நீதிமன்றங்களுமே பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இரு பிரிவாக இட ஒதுக்கீடு வழங்கப்பட்டதும், இட ஒதுக்கீட்டின் அளவு 68% ஆக உயர்த்தப்பட்டதும் செல்லாது என்று தீர்ப்பளித்தன. அந்த வழக்கில் தான் இட ஒதுக்கீட்டின் மொத்த அளவு 50 விழுக்காட்டைத் தாண்டக் கூடாது என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. இந்தத் தீர்ப்பு தான் பின்னாளில் மண்டல் வழக்கில் மறு உறுதி செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

நாகேகவுடா ஆணையத்தின் பரிந்துரைப்படி செயல்படுத்தப்பட்ட இட ஒதுக்கீட்டு முறையை கர்நாடக உயர்நீதிமன்றமும், உச்சநீதிமன்றமும் செல்லாது என்று 1963-ஆவது ஆண்டில் அறிவித்து விட்ட நிலையில், அப்போது முதலமைச்சராக இருந்த நிஜலிங்கப்பா, உடனடியாக இன்னொரு பிற்படுத்தப்பட்ட ஆணையத்தை அமைக்க வேண்டும் என்று நினைத்தார். நாகேகவுடா ஆணையத்தின் பரிந்துரை அறிக்கையிலும் அதுகுறித்து குறிப்புரைகளை எழுதினார். ஆனால், கர்நாடக அரசியலில் ஆதிக்கம் செலுத்திய லிங்காயத்துகள், ஒக்கலிகர்கள் அதை அனுமதிக்கவில்லை. அதனால் வேறு வழியின்றி,  பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இட ஒதுக்கீட்டின் அளவை 50 விழுக்காட்டிலிருந்து 30% ஆக குறைத்தும், பட்டியலினம் மற்றும் பழங்குடியினருக்கு முறையே 15%, 3% இட ஒதுக்கீடு அளித்தும் நிஜலிங்கப்பா அரசு நிர்வாக ஆணை பிறப்பித்தது.

சாதிகளின் அடிப்படையில் மட்டும் தான் இட ஒதுக்கீடு என்ற நிலை மாற்றப்பட்டு, விவசாயம் செய்வோர், கைவினை கலைஞர்கள், சிறு வணிகர்கள், உடல் உழைப்பைக் கொண்டு  கீழ்நிலைப் பணிகளை செய்வோர் என்ற அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்கப்பட்டது. 1963&ஆம் ஆண்டில் தொடங்கி 1977-ஆம் ஆண்டு வரை இந்த வகையான இட ஒதுக்கீடு நடைமுறையில் இருந்தது. இது எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றாகும். இந்த இட ஒதுக்கீட்டு முறையால் கர்நாடகத்தில் பெரும்பான்மை சமுதாயங்களாக லிங்காயத்துகள், ஒக்கலிகர்கள் ஆகியவை தான் பெரும்பான்மையான இட ஒதுக்கீட்டை அனுபவித்தன.

சமூக நீதிக்கு எதிரான இந்த செயல் லிங்காயத்துகள், ஒக்கலிகர்கள் அல்லாத சிறு சமுதாயங்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. அந்த நேரத்தில் தான் 1972-ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் தேவராஜ் அர்ஸ் தலைமையிலான காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்று பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்தது. 1969-ஆம் ஆண்டில் காங்கிரஸ் கட்சி இரண்டாக உடைந்த பிறகு, அக்கட்சிக்கு தேவராஜ் அர்ஸ் மிகப்பெரிய வெற்றியை தேடிக் கொடுத்ததால் அமைச்சர்கள் நியமனத்தில் தொடங்கி அனைத்திலும் அவருக்கு இந்திரா காந்தி மிக அதிக சுதந்திரத்தைக் கொடுத்திருந்தார்.

கர்நாடக வரலாற்றில் லிங்காயத்துகள், ஒக்கலிகர்கள் அல்லாத சமுதாயத்தைச் சேர்ந்த முதலாவது முதலமைச்சரும் தேவராஜ் அர்ஸ் தான். தமக்கு கிடைத்த அரசியல் அதிகாரம், சுதந்திரம் ஆகியவற்றைப் பயன்படுத்திக் கொண்டு பிற்படுத்தப்பட்ட வகுப்புகளைச் சேர்ந்த புதிய அரசியல் தலைவர்களை தேவராஜ் அர்ஸ் உருவாக்கினார்.  கர்நாடக அரசியலிலும், தேசிய அரசியலிலும் பின்னாளில் சாதனைகளை படைத்த வீரப்ப மொய்லி, பங்காரப்பா, குண்டு ராவ் போன்ற தலைவர்கள், மிகச் சாதாரணமான பின்னணியில் இருந்து தேவராஜ் அர்ஸ் அவர்களால் அடையாளம் காணப்பட்டு ஆளாக்கப்பட்டவர்கள் ஆவர்.

மற்றொருபக்கம் லிங்காயத்துகள், ஒக்கலிகர்கள் அல்லாத மக்களுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில்  வலிமையான அடித்தளம் அமைத்துத் தர வேண்டும் என்றும் தேவராஜ் அர்ஸ் கருதினார். நிஜலிங்கப்பா காலத்தில் அறிவிக்கப்பட்டு, நடைமுறையில் இருந்த இட ஒதுக்கீடு பிழையானதாகவும், தவறாக பயன்படுத்தப்படுவதாகவும் இருந்ததால் அதை வைத்துக் கொண்டு பின்தங்கிய தன்மை கொண்ட மக்களுக்கு பெரிதாக எந்த உதவியையும் வழங்க முடியாது என்று முதலமைச்சர்  தேவராஜ் அர்ஸ்  நினைத்தார்.

அவரது எண்ணம் மிகவும் சரியானது என்று கூறும் வகையில், அவர் முதலமைச்சர் ஆவதற்கு முன்பிலிருந்தே, கர்நாடகத்தில் புதிய இட ஒதுக்கீட்டுத் திட்டத்தை வகுப்பதற்காக புதிய பிற்படுத்தப் பட்டோர் ஆணையத்தை உருவாக்க  வேண்டும் என்ற கோரிக்கை  எழுந்திருந்தது. பல நேரங்களில்   தேவராஜ் அர்ஸ் அவர்களே அந்த கோரிக்கையை வலியுறுத்தி, ஆட்சியாளர்களிடம் மனுக்களைக் கொடுத்து இருந்தார்.

முதலமைச்சர் ஆனவுடன் கர்நாடகத்தில் புதிய இட ஒதுக்கீட்டுத் திட்டத்தை வகுக்க முடிவு செய்த  தேவராஜ் அர்ஸ், அதற்காக புதிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தை அமைப்பது குறித்து அரசுக்கு பரிந்துரைக்க அமைச்சரவை துணைக்குழு ஒன்றை அமைத்தார். அந்த அமைச்சரவைக் குழுவில் மூத்த  அமைச்சர்களான எம். மல்லிகார்ஜுன சுவாமி, பி. பசவலிங்கப்பா, டி.கே. நாயக்கர் ஆகியோர் இடம் பெற்று இருந்தனர். விரிவான ஆய்வுக்குப் பிறகு கர்நாடகத்தில் புதிய இட ஒதுக்கீட்டுத் திட்டத்தை வகுக்க புதிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தை அமைக்க வேண்டும் என்று அமைச்சர்கள் குழு பரிந்துரைத்தது.

அதன்படி 1972-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் புதிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தை கர்நாடக முதலமைச்சர் தேவராஜ் அர்ஸ் அமைத்தார். அந்த ஆணையத்தின் தலைவராக இளம் வழக்கறிஞர்  எல்.ஜி. அவானூர் (L. G. Havanur) நியமிக்கப்பட்டார்.

நாளை....
அவானூர் என்கிற மண்டலின் முன்னோடி!

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages