மருத்துவர் ராமதாஸ் எனும் சமூகநீதி போராளி - மாயன் மெய்யறிவன் - Agnipuratchi

மருத்துவர் ராமதாஸ் எனும் சமூகநீதி போராளி - மாயன் மெய்யறிவன்

Share This

மருத்துவர் ராமதாஸ் எனும் சமூகநீதி போராளி - மாயன் மெய்யறிவன்

வன்னியர் சங்கங்களை ஒருங்கிணைத்து, ஜனநாயக வழியில், சமூக நீதிக்காக மருத்துவர் ராமதாஸ் போராடியதும், அதன் பிறகு அதை அடித்தளமாக கொண்டு, பாமகவை நிறுவியதும், ஆகப்பெரிய வரலாற்று நிகழ்வுகள். இது மட்டும் நடக்காமல் போயிருந்தால், வட தமிழ் நாடு முழுவதும் நக்சலைட் இயக்கங்கள் வளர்ந்திருக்கும். பீகார், அஸாம் போல இங்கே அவ்வப்போது துப்பாக்கிகள் வெடித்துக் கொண்டிருந்திருக்கும். இப்படியான தீவிரவாத கம்யூனிஸ போக்குகள் நிகழாமல் தடுத்து, மக்களை ஜனநாயகப்படுத்தியதில், மருத்துவர் ராமதாஸுக்கு பெரும் பங்குண்டு. மக்களின் உரிமைகள் மறுக்கப்படும் போது, அவர்களை ஒருங்கிணைத்து ஜனநாயக வழியில் கொண்டுவருவது சாதாரண விஷயமில்லை.

காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகளின் வீழ்ச்சிக்குப் பிறகு, தமிழக அரசியல் திராவிட கட்சிகளின் ஆளுகையின் கீழ் வந்தன. அவற்றுக்கு மாற்றாக வீரியத்துடன் எழுந்து நின்ற தமிழர் கட்சி தான் பாட்டாளி மக்கள் கட்சி.

மருத்துவர் ராமதாஸின் ஜனநாயக அரசியல் செல்வாக்கு உயர்ந்ததைப் பார்த்த பிறகு, அதேபோல, திருமாவளவன், மருத்துவர் கிருஷ்ணசாமி என்று பலரும், குறிப்பிட்ட சாதி பின்புலம் கொண்டு, ஜனநாயக அரசியலின் பக்கம் குறிப்பிட்ட சதவிகித மக்களின் சக்தியை ஈர்த்தார்கள். இவர்களும் இவ்வாறு செய்யாமல் போயிருந்தால், இம்மக்கள் எவ்வழியை தேர்வு செய்திருப்பார்கள் என மனித இயங்கியல் வழி ஆராய்ந்தால், மருத்துவர் ராமதாஸ் துவக்கிய ஜனநாயக வழியின் முக்கியத்துவம் புரியும்.

ஒரு குறிப்பிட்ட சாதி மக்களை, பின்புலமாக கொண்டு உருவாக்கப்படும் அரசியல் கட்சிகளின் மீது எவருக்கும் விமர்சனங்கள் இருக்கலாம். ஆனால் தங்களுக்குப் போதிய ஜனநாயக பிரதிநிதித்துவம் கிடைக்கவில்லை என்பதாலேயே இத்தகைய இயக்கங்கள் உருவாகி தொடர்கின்றன என்பதே யதார்த்த நிலை. இவ்வகை கட்சிகள் சமூகத்தில் குறிப்பிட்ட சதவிகித மக்களை  ஜனநாயக வழிப்படுத்தியிருப்பதை, அரசியலின் நுண்போக்கு அறிந்த எவரும் மறுத்துவிட இயலாது.

வன்னியர் இடப்பங்கீடு கேட்டு போராடினார். இஸ்லாமியருக்கு தனி இடப்பங்கீடு கேட்டார். அருந்ததியருக்கு தனிப்பங்கீடு தரவேண்டும் என்றார். இம்மானுவேல் சேகரனை வெகு ஜனங்களிடம் அடையாளப்படுத்தினார். தேவேந்திர குல வேளாளர் பெயர் மாற்றத்தை ஆதரித்தார். அதிகளவில் அம்பேத்கர் சிலைகளை நிறுவினார். இரண்டு தலித்துகளை மத்திய அமைச்சர் ஆக்கினார். பிற்படுத்தப்பட்டோர் இடப்பங்கீட்டிற்கு போராடினார். திருமாவளவனை இணைத்துக்கொண்டு தமிழ் இயக்கம் நடத்தினார். இரட்டை குவளை முறையை மாவீரன் ஜெ.குரு மூலமாக அரியலூர் பகுதியில் ஒழித்தார். தலித் பிணத்தை தானே தூக்கி சுமந்தார். இன்னும் வரிசைப்படுத்திக்கொண்டே போகலாம்.

பாமக மற்றும் மக்கள் தொலைக்காட்சியில்; பிரபஞ்சன், சுப.வீரபாண்டியன், வேல்முருகன், அ.மார்க்ஸ், ரவீந்திரன் துரைசாமி, அய்யநாதன், சீமான் என எவ்வளவோ நபர்களுக்கு வாய்ப்பு தந்து, அவர்கள் வளர வழி தந்தார்.

தமிழ், தமிழர் அரசியலில் மருத்துவர் ராமதாஸ் சாதித்தவையும் இழந்தவையும் ஏராளம். யார் எப்படிப் போனால் என்ன என்று, ‘வன்னியர் அரசியல்’ மட்டும் செய்து, வன்னியர்களை மட்டும் வளர்த்திருந்தால், வன்னியர்கள் நன்றாக முன்னேறி இருக்கலாம். ஆனால் வன்னியர்களின் வாக்குகளை பெருமளவு பெற்று தமிழக நலன் சார்ந்த அரசியல் செய்கிறார்.

சமூகநீதி போராளி, தமிழர் தலைவர், தமிழ்க்குடி தாங்கி, தமிழினப் போராளி, மக்கள் காவலர் என பல வகைகளிலும் தொடர்ந்து சளைக்காமல் செயல்பட்டு, தமிழக மக்களுக்கும், தமிழர்களுக்கும் தனது சமூகநீதி அரசியலின் மூலமாக பல பங்களிப்புகளைச் செய்து வரும், பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ‘மருத்துவர் ராமதாஸ்’ அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

‘நல்ல புத்தகங்களைப் படியுங்கள், நல்ல புத்தகங்களைப் பரிசளியுங்கள், நல்லவை படியுங்கள், நல்லவைகளை கற்றுக்கொள்ளுங்கள்’ என சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் கூறிவரும் மருத்துவர் ராமதாஸ் அவர்களின் நற்செய்திகளை, அவர்தம் தொண்டர்களிடத்தே இந்த இனிய நாளில் பகிர்ந்து மகிழ்கிறேன்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages