ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளுக்காக போராடிய
இம்மானுவேல் சேகரனின் தியாகத்தைப் போற்றுவோம்! - மருத்துவர் இராமதாசு அய்யா
தமிழ்நாட்டில் ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளுக்காக போராடியவரும், இந்திய விடுதலைப் போராட்டத்தில் வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் பங்கேற்று சிறை சென்றவருமான இம்மானுவேல் சேகரன் அவர்களின் 64-ஆவது நினைவு நாள் இன்று கடைப்பிடிக்கப்படுகிறது. இந்த நாளில் அவரது நினைவையும், அவர் செய்த தியாகங்களையும் போற்றுவோம்.
இம்மானுவேல் சேகரன் மக்களின் உணர்வோடு கலந்தவர். ஏழு மொழிகளில் தேர்ச்சி பெற்றவர். வசதியாகவும், சொகுசாகவும் வாழ வாய்ப்புகள் இருந்தும் அவற்றை துறந்து விட்டு தமது மக்களின் சமூக விடுதலைக்காக போராடியவர்.
இம்மானுவேல் சேகரன் மீது எனக்கு மிகுந்த பற்று உண்டு. அதனால் தான் ஓர் இனத்தின் விடுதலைக்காக போராடிய அந்த தியாகியின் நினைவிடம் சீரழிந்து கிடந்ததை சகித்துக் கொள்ள முடியாமல் எனது சொந்த செலவில் அதை சீரமைத்தேன். அங்கு 25 ஆண்டுகளுக்கும் மேலாக பாமக தான் தொடர்ந்து மரியாதை செலுத்தி வருகிறது. நானும் பலமுறை நேரில் சென்று மரியாதை செய்திருக்கிறேன்.
இம்மானுவேல் சேகரனின் தியாகம் இன்னும் உரிய வகையில் அங்கீகரிக்கப்படவில்லை. அவரது நினைவு நாள் அரசு விழாவாகக் கொண்டாடப்பட வேண்டும் என்று பல ஆண்டுகளாக வலியுறுத்தி வருகிறோம். இந்த கோரிக்கை விரைவில் நிறைவேறும் என்று நம்புவோம்!
No comments:
Post a Comment