FactCheck: அக்டோபர் மாதத்தில் 21 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறையா? உண்மை என்ன?
தசரா உள்ளிட்ட விழாக்கள் காரணமாக 31 நாட்களை கொண்ட அக்டோபர்-2021 மாதத்தில் 21 நாட்கள் வங்கிகள் செயல்படாது எனவும் பொதுமக்கள் தங்கள் வங்கி சார்ந்த பணிகளை திட்டமிட்டுக் கொள்ள வேண்டும் என தேசிய செய்தி ஊடகங்கள் முதல் உள்ளூர் ஊடகங்கள் வரை செய்தி வெளியிட்டு வருகின்றன. அதன் உண்மைத்தன்மை குறித்து காண்பதற்கு முன்னர் வங்கிகளுக்கு விடப்படும் விடுமுறை முறைமை குறித்து காண்போம்.
செலாவணி முறிச் சட்டம், 1881
வங்கிகளுக்கு அளிக்கப்படும் விடுமுறை என்பது செலாவணி முறிச் சட்டம், 1881 கீழ் அறிவிக்கப்படுகிறது. எனினும் அந்த சட்டத்திலும் வங்கிகளுக்கு விடுமுறை என்று தனி பத்தி அல்லது சிறப்பு பிரிவு என்ற ஒன்று இல்லை. செலாவணி முறிச் சட்டம், 1881 இல் பிரிவு 25 இன் படி, செலாவணி (Negotiable Instrument) ஒன்று தனது முதிர்வு தேதியை எட்டும் போது அந்த தேதி விடுமுறை எனும் பட்சத்தில் முதிர்வு தேதி அடுத்த நாளைக்கு (வேலை நாள்) நீட்டிக்கப்படும்.
இதன்படி,1881 செலாவணி முறிச்சட்டத்தின் கீழ் நடுவண்/மாநில/ஒன்றிய ஆட்சிப் பகுதி அரசுகள் வங்கிகளுக்கு விடுமுறை அறிவித்தல் என்பது காசோலை, வரைவோலை உள்ளிட்ட செலாவணி கருவிகளின் கால நீட்டிப்பை மையப்படுத்தி அமைக்கப்பட்டுள்ளது. இந்த சட்டத்தின் கீழ் அளிக்கப்படும் விடுமுறை, வங்கிகள் உள்ளிட்ட நிதி நிறுவனங்களை தவிர்த்து பிற தொழிற்சாலை, அரசு மற்றும் தனியார் அலுவலகங்களுக்கு பொருந்தாது.
மாநிலங்கள் பொறுத்து மாறுபடும்
பொதுவாக, தேசிய பொது விடுமுறைகள் தவிர்த்து, வங்கிகள் செயல்படும் நாட்கள் மற்றும் விடுமுறைகளை மாநில/ ஒன்றிய ஆட்சிப் பகுதி அரசுகளே தீர்மானிக்கின்றன. குடியரசு திருநாள், விடுதலை திருநாள் மற்றும் காந்தி ஜெயந்தி ஆகிய 3 நாட்களும் அனைத்து மாநிலங்களுக்கும் தேசிய அளவில் பொது விடுமுறையாக அறிவிக்கப்படுகிறது. இது தவிர்த்து, அந்தந்த மாநிலங்களின் பண்பாட்டுக்கு ஏற்ப விழாக்களை கணக்கில் கொண்டு மாநில அரசுகளால் விடுமுறை அறிவிக்கப்படுகிறது. காட்டாக, வட இந்தியாவில் கொண்டாடப்படும் ஹோலி, ரக்ஷா பந்தன் உள்ளிட்ட விழாக்களுக்கு தமிழகத்தில் விடுமுறை கிடையாது. அதே போல, ஓணம், தைப்பூசம் உள்ளிட்ட விழாக்களுக்கு வட மற்றும் வட கிழக்கு மாநிலங்களில் விடுமுறை விடப்படாது. வங்கிகள் பட்டியலிடப்பட்டு ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டில் இருக்கிற போதும் கூட வங்கிகள் செயல்படும் நாள் என்பது மாநில அரசுகளை பொறுத்தது.
அக்டோபரில் 21 நாட்கள் விடுமுறை?
வரும் அக்டோபர் மாதத்தில் தமிழகத்தில் செயல்படும் வங்கிகளுக்கு 4 நாட்கள் மட்டுமே பொது விடுமுறை விடப்பட்டுள்ளது.
அதாவது,
அக். 2 - காந்தி ஜெயந்தி
அக். 14 - சரசுவதி பூஜை
அக். 15 - விஜயதசமி
அக். 19 - மிலாடி நபி.
பொதுவாக, அனைத்து மாதங்களிலும் 2வது மற்றும் 4வது சனிக் கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் வங்கிகள் செயல்படாது. இது அனைவரும் அறிந்ததே. ஆக, இதில் அக்டோபர் மாதத்தில் வரும் 2 சனி மற்றும் 5 ஞாயிற்றுக் கிழமைகளையும் சேர்த்தால் கூட 11 நாட்கள் தான் வங்கி விடுமுறைகள் என்று வரும்.
ஆனால், 21 நாட்கள் வங்கி விடுமுறை என ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன. பல்வேறு மாநிலங்களில் உள்ள உள்ளூர் விடுமுறைகளையும் சேர்த்து 21 கணக்கிட்டு 'Clickbait' எனப்படும் பார்வையாளர்களை படிக்கத் தூண்டும் வகையில் செய்திகள் வெளியிடப்பட்டுள்ளன. அதன்படி திரிபுரா, கர்நாடகம், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் அக் 6 என்று மகாளய அமாவாசைக்கு விடுமுறை விடப்பட்டிருக்கும் அதே வேளையில் மற்ற மாநிலங்களில் உள்ள வங்கிகள் அக் 6 அன்று இயங்கும். பொதுமக்கள் பலர் செய்தியின் தலைப்பை மட்டுமே படித்துவிட்டு தவறாக பொருள் கொண்டு தேவையில்லாமல் வங்கிகளில் கூட்டம் கூடுவர்.
இவ்வாறான வங்கி விடுமுறை குறித்த செய்திகள் வெளியிடப்படுவது ஒன்றும் முதல்முறை அல்ல. இதனால் பொதுமக்களுக்கும் குழப்பமே மிஞ்சும். அனைத்து மாநிலங்களின் விடுமுறை நாட்களையும் கணக்கிட்டு பார்த்தால் 21 நாட்கள் விடுமுறை என்பது சரியானதே என ஊடக நண்பர்கள் விவாதிக்கக் கூடும். ஆனால், இது போன்ற செய்திகளை வெளியிடுவது என்பது "கனமழை காரணமாக இன்று பள்ளிகளுக்கு விடுமுறை" என ஒரு ஞாயிற்றுக்கிழமை நாள் காலை Breaking News வெளியிடுவதற்கு ஒப்பானது. எனவே இதன்மூலம், பொதுமக்களுக்கு தெரிவிக்க விரும்புவது என்னவென்றால் நாட்டின் எந்தவொரு மூலையில் செயல்படும் வங்கிக்கும் இந்த மாதம் 21 நாட்கள் விடுமுறை வழங்கப்படவில்லை என்பதே.
~ கதிர் கோ
No comments:
Post a Comment