திண்டிவனம் ஆ.கோவிந்தசாமி அரசு கலைக் கல்லூரியில் அவரது உருவப் படத்திற்கு நேரவிருந்த இழுக்கும், தகர்த்திய பா.ம.க வரும் வன்னியர் சங்கம். - Agnipuratchi

திண்டிவனம் ஆ.கோவிந்தசாமி அரசு கலைக் கல்லூரியில் அவரது உருவப் படத்திற்கு நேரவிருந்த இழுக்கும், தகர்த்திய பா.ம.க வரும் வன்னியர் சங்கம்.

Share This

திண்டிவனம் ஆ.கோவிந்தசாமி அரசு கலைக் கல்லூரியில் அவரது உருவப் படத்திற்கு நேரவிருந்த இழுக்கும், தகர்த்திய பா.ம.க வரும் வன்னியர் சங்கம்.

திமுகவின் முன்னோடிகளில் ஒருவர் ஆ.கோவிந்தசாமி அவர்கள்.

திமுகவுக்கு உதயசூரியன் சின்னத்தை வழங்கியவர் இவர் தான்.

அறிஞர் அண்ணா உள்ளிட்ட திமுகவின் ஐம்பெரும் தலைவர்கள் 1953-ஆம் ஆண்டு மும்முனை போராட்டத்தில் ஈடுபட்டு சிறை சென்ற போது கட்சியை வழிநடத்திச் செல்ல தலைமையால் நியமிக்கப்பட்டவரும் இவர் தான்.
1967-ஆம் ஆண்டு முதல் 1969-ஆம் ஆண்டு வரை அண்ணா தலைமையிலான அமைச்சரவையிலும், கலைஞர் தலைமையிலான அமைச்சரவையிலும் அமைச்சராக பதவி வகித்த போதிலும் அப்பழுக்கற்ற வரலாற்றுக்கு சொந்தக்காரர் ஏ.ஜி. என்றழைக்கப்பட்ட ஆ.கோவிந்தசாமி.

1969-ஆம் ஆண்டு அவர் மறைந்த பிறகு அவரது பெயரில் திண்டிவனத்தில், திரு.ஆ. கோவிந்தசாமி  அரசினர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி திறக்கப்பட்டது.  அப்போது அந்தக் கல்லூரியின் முதல்வர் அறையில், முதல்வர் இருக்கைக்கு பின்புறச் சுவற்றில் ஆ.கோவிந்தசாமியின் பிரமாண்ட, கம்பீரமான உருவப்படம் திறக்கப்பட்டது.

அடுத்த சில ஆண்டுகளில், அக்கல்லூரியில் பயிலும் வன்னியர் சமுதாய மாணவர்களின் நலனுக்காக  ஓர் அறக்கட்டளை உருவாக்கப்பட்டது. நன்றாக பயிலும் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்குவற்காக அந்த அறக்கட்டளையை ஆ. கோவிந்தசாமி அவர்களின் பெயரில் நான் தான் முன்னின்று தொடங்கினேன். அதற்காக நிதி வழங்கிய எனது பெயரும், மற்றவர்கள் பெயரும் எழுதப்பட்ட பலகை ஆ.கோவிந்தசாமியின் உருவப் படத்திற்கு அருகில் இருக்கும். அப்போது நான் மருத்துவர் மட்டுமே. வன்னியர் சங்கமோ, பாட்டாளி மக்கள் கட்சியோ அப்போது தொடங்கப்படவில்லை. உயர்கல்வியை நினைத்துக் கூட பார்க்க முடியாத அளவுக்கு மிகவும் பின்தங்கியிருந்த வன்னியர் சமுதாயத்தைச் சேர்ந்த மாணவர்களுக்கு உதவும் நோக்கத்துடன் தான் அந்த அறக்கட்டளை தொடங்கப்பட்டது. 2017 வரை இது செயல்பட்டு வந்தது.

ஆ.கோவிந்தசாமி அமைச்சராக இருந்தவர் என்பதைக் கடந்து தென்னாற்காடு மாவட்டத்தின் வளர்ச்சிக்கு அனைத்து வழிகளிலும் பாடுபட்டவர். அவர் சாதிகளைக் கடந்த சேவையாளர். அந்த வகையில் அவரது பெயரில் கல்லூரியும், கல்லூரி முதல்வரின் அறையில் அவரது உருவப்படமும் அமைக்கப்பட்டது மிகவும் பொருத்தமானதே. இது யாருடைய கண்களையும் உறுத்தவில்லை. இன்னும் கேட்டால் கல்லூரி வளாகத்தில் அவரது உருவச்சிலையும் அமைக்க வேண்டும் என்பதே பாட்டாளி மக்கள் கட்சியின் கோரிக்கையாக இருந்தது. அந்த கோரிக்கை விரைவில் நிறைவேறும் சூழல் உள்ளது.

2017-ஆம் ஆண்டில் தான் ஆ.கோவிந்தசாமி கல்லூரியில் சாதி நுழைந்தது. அப்போது முதல்வராக இருந்த நடராஜன் என்பவர் விடுப்பில் சென்ற நிலையில், உஷா ரகோத்தமன் என்பவர் சில நாட்களுக்கு  முதல்வர் பொறுப்பை கவனித்துக் கொண்டார். அப்போது அதே கல்லூரியில் பணியாற்றிய சிலரது தூண்டுதலின் பேரில் ஆ.கோவிந்தசாமியின் உருவப்படத்தை அங்கிருந்து அகற்றினார் உஷா ரகோத்தமன். அதற்கு எதிர்ப்பு எழுந்தால் சமாளிப்பதற்காக அங்கு அம்பேத்கரின் உருவப் படத்தை  மாட்டினார். ஆனால், இந்த மாற்றங்களைச் செய்வதற்கு உரிய நடைமுறைகள் எதுவும் கடைபிடிக்கப்படவில்லை. அதுமட்டுமின்றி அறக்கட்டளையின் செயல்பாடுகளையும் சிதைத்து செயல்படாமல் செய்து விட்டார்.

2021-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் கல்லூரியின் புதிய முதல்வராக பொறுப்பேற்ற பால் கிரேஸ்,  இதை அறிந்து, ஆ.கோவிந்தசாமியின் உருவப்படத்தை அது ஏற்கனவே இருந்த இடத்திற்கே மாற்றினார். அம்பேத்கர் அவர்களின் உருவப்படமும் ஏற்கனவே அது இருந்த இடத்திற்கே மாற்றப்பட்டது. இது ஒரு மாதத்திற்கு முன்பே நடந்த நிகழ்வு. இதற்கு எந்தத் தரப்பிலிருந்தும் எதிர்ப்புகள் எழவில்லை.

புதிதாக பொறுப்பேற்ற முதல்வர் பால் கிரேஸ் பணியில் கண்டிப்பானவர். சரியான நேரத்திற்கு பணிக்கு வராத விரிவுரையாளர்களை வகுப்புக்குள் அனுமதிக்க மாட்டார்; விடுப்பு எடுத்துக் கொண்டு செல்லும்படி கூறி விடுவார். வகுப்பு நேரத்தில் மாணவர்கள் வெளியில் சுற்றினால் அவர்கள் மீது நடவடிக்கை எடுப்பார். மாணவிகளுக்கு தொல்லை கொடுக்கும் மாணவர்களை தண்டிப்பார். அதனால், முதல்வர் பால் கிரேசை எப்படியாவது பணியிட மாற்றம் செய்து விட வேண்டும் என்று ஒரு பிரிவினர்   துடித்துக் கொண்டிருந்தார்கள். விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த அமைச்சர்களின் பரிந்துரைகளை  பொருட்படுத்தாததால் அவர்களின் எதிர்ப்பையும் முதல்வர் பால் கிரேஸ் சம்பாதித்து இருந்ததாக தெரிகிறது.

முதல்வரை பழிவாங்க வேண்டும் என்று காத்திருந்தவர்களுக்கு ஓர் ஆயுதமாக ஆ.கோவிந்தசாமி புகைப்படம் மீண்டும் பழைய இடத்திற்கே மாற்றப்பட்ட விவகாரம் கிடைத்தது. இது தொடர்பாக முதல்வரிடம் மோதலில் ஈடுபட்ட சில விரிவுரையாளர்களும், பிற பணியாளர்களும் கடந்த சில நாட்களுக்கு முன்பு தாங்கள் சார்ந்த கட்சியினர் 50 பேரை அழைத்துக் கொண்டு முதல்வரின் அறைக்குள் நுழைந்து அவரை முற்றுகையிட்டுள்ளனர்.

‘‘முதல்வர் இருக்கைக்கு பின்னால் இருந்த அம்பேத்கரின் உருவப்படத்தை அகற்றி விட்டு, ஆ.கோவிந்தசாமி படத்தை அங்கு எப்படி வைக்கலாம். ஆ.கோவிந்தசாமியின் படத்தை அங்கிருந்து உடனடியாக அகற்ற வேண்டும். பா.ம.க. நிறுவனர் இராமதாசு பெயர் பொறித்த பலகை இங்கு எப்படி இருக்கலாம்? அதையும் அகற்ற வேண்டும்’’ என்று கூச்சலிட்டு முதல்வரை மிரட்டியிருக்கிறார்கள்.

அதற்கு சில நாட்களுக்கு முன்பாக அமைச்சர் மஸ்தான், முதல்வரின் அறைக்குள் நுழைந்து அவரது இருக்கையில் அமர்ந்து கொண்டு, ‘‘ அது எப்படி... ஆ.கோவிந்தசாமியின் படத்தை மட்டும்  வைப்பீர்கள்?  அரசாங்க விதிப்படி வைக்கப்பட வேண்டிய 16 தலைவர்களின் படத்தையும் வைக்க வேண்டும். அதற்கு ஆகும் செலவை நான் பார்த்துக் கொள்கிறேன். இல்லாவிட்டால் யார் படமும் இங்கு இருக்கக்கூடாது’’ என்று மிரட்டி விட்டு சென்றிருக்கிறார்.
அய்யோ... பாவம். அவருக்கு தெரியவில்லை...
அவர் பிறப்பதற்கு முன்பே திமுகவை தலைமையேற்று நடத்தியவர் ஆ.கோவிந்தசாமி.

அவர் பிறப்பதற்கு முன்பே உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு சட்டமன்ற தேர்தலிலும், உள்ளாட்சித் தேர்தலிலும் வெற்றி பெற்றவர் ஆ.கோவிந்தசாமி.

அவருக்கு 55 ஆண்டுகளுக்கு முன்பே அமைச்சராகி அண்ணா அமைச்சரவையிலும், கலைஞர் அமைச்சரவையிலும் அங்கம் வகித்தவர் ஆ.கோவிந்தசாமி அவர்கள் என்பது.

ஆனால், இந்த மிரட்டல்கள் எதற்கும் கல்லூரி முதல்வர் அஞ்சவில்லை. ஆனால், அவரையும் மீறி  சில முயற்சிகள் நடைபெற்றன.

இது குறித்த தகவல்கள் எனக்கு கிடைத்ததும் மயிலம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் சிவக்குமார், மாவட்ட செயலாளர் ஜெயராஜ் ஆகியோர் தலைமையில் பாட்டாளி மக்கள் கட்சியின் நிர்வாகிகள் குழுவினர் கல்லூரி முதல்வரை சந்தித்து ஆ.கோவிந்தசாமியின் உருவப்படத்தை அங்கிருந்து அகற்றக் கூடாது என்று வலியுறுத்தும்படி அறிவுறுத்தினேன்.

அதன்படியே வெள்ளிக்கிழமை ஆ.கோவிந்தசாமி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு திரண்டு சென்ற பாட்டாளி மக்கள் கட்சியினர் முதல்வரை சந்தித்து ஆ.கோவிந்தசாமி அவர்களின் உருவப்படத்தை அகற்றக்கூடாது என்று வலியுறுத்தினார்கள்.
‘‘திண்டிவனம் அரசு கலைக் கல்லூரி ஆ. கோவிந்தசாமி அவர்களின் நினைவாக அவரது பெயரில் தான் அமைக்கப்பட்டுள்ளது. அவரது பெயரில் உள்ள கல்லூரி திறக்கப்பட்ட நாளில் இருந்தே அவரது உருவப்படம் முதல்வரின் அறையில் இருந்து வருகிறது. அது தான் முறையும் கூட. அதுமட்டுமின்றி,  ஆ.கோவிந்தசாமியின் புதல்வர் ஏ.ஜி.சம்பத் அன்பளிப்பாக கொடுத்த ஆ.கோவிந்தசாமியின் சிலையும்  பார்வைக்கு வைக்கப்பட வேண்டும்.

முதல்வரின் அறையில் அம்பேத்கர் உருவப்படம் வைப்பதில் எங்களுக்கு எந்த மறுப்பும் இல்லை. உண்மையில் தமிழகத்தில் அதிக எண்ணிக்கையில் அம்பேத்கர் சிலைகளை திறந்தவர் மருத்துவர் அய்யா அவர்கள் தான். அதனால் அம்பேத்கர் உட்பட எந்த தலைவர்களின் படத்தை வேண்டுமானாலும் வைத்துக் கொள்ளுங்கள். ஆனால், ஆ.கோவிந்தசாமி அவர்களின் உருவப்படமும், மருத்துவர் அய்யா அவர்களின் பெயர் எழுதப்பட்ட அறக்கட்டளை பலகையும் அங்கிருந்து அகற்றப்படக்கூடாது. அவ்வாறு நடந்தால் அதைக் கண்டித்து பாட்டாளி மக்கள் கட்சி கடுமையான போராட்டம் நடத்தும்’’ என்று மயிலம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் சிவக்குமார், மாவட்ட செயலாளர் ஜெயராஜ் ஆகியோர்  வலியுறுத்தினார்கள். முதல்வரும் அதை ஏற்றுக் கொண்டிருக்கிறார்.

இதற்கிடையே, விழுப்புரம் மாவட்ட ஆட்சியரும், காவல்துறை கண்காணிப்பாளரும் சட்டமன்ற உறுப்பினர் சிவக்குமாரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு,‘‘ஆ.கோவிந்தசாமி அவர்களின் உருவப்படமும், மருத்துவர் அய்யா அவர்களின் பெயர் எழுதப்பட்ட அறக்கட்டளை பலகையும் அங்கிருந்து அகற்றப்படாது. அமைச்சர் மஸ்தான் அவர்களின் செலவில் 16 தலைவர்களின் உருவப் படங்கள் ஒரே அளவில் தயாரிக்கப்பட்டு முதல்வர் அறையில் திறக்கப்படும். ஆ.கோவிந்தசாமியின் உருவச் சிலையும் பார்வைக்கு வைக்கப்படும். அதனால் பாட்டாளி மக்கள் கட்சி எந்த வித போராட்டமும் நடத்த வேண்டாம்’’ என்று கேட்டுக் கொண்டிருக்கின்றனர்.

பாட்டாளி மக்கள் கட்சியின் நிலைப்பாட்டை அமைச்சர் மஸ்தானிடம், சட்டமன்ற உறுப்பினர் சிவக் குமார் கூறிய போது, அதை அவரும் ஏற்றுக் கொண்டிருக்கிறார். இவ்வாறாக ஆ.கோவிந்தசாமி அவர்களின் உருவப்படத்தை அகற்றும் முயற்சி தடுத்து நிறுத்தப்பட்டிருக்கிறது. எதிர்காலத்தில் நமது ஏ.ஜி. அவர்களுக்கு ஏதேனும் இழுக்கு ஏற்படுத்த நினைத்தால் அதை எதிர்த்து மாபெரும் போராட்டத்தை பா.ம.க. நடத்தும்.
                      

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages