வி.பி.சிங்கின் சமூகநீதி: எதிர்த்த வடக்கும், ஆதரித்த தமிழகமும் - மருத்துவர் இராமதாசு அய்யா நினைவுகள்.
1. பற்றி எரிந்த தில்லி!
மறைந்த பாரதப் பிரதமர் வி.பி.சிங் அவர்களுக்கு வரும் 25-ஆம் தேதி 92-ஆவது பிறந்தநாள்.
இந்தியாவில் சமூகநீதி என்றால் நினைவுக்கு வருபவர்களில் குறிப்பிடத்தக்கவர் வி.பி.சிங்.
மத்திய அரசின் கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27% இட ஒதுக்கீடு வழங்க வகை செய்யும் மண்டல் ஆணையத்தின் அறிக்கை 1980&ஆம் ஆண்டு மத்திய அரசிடம் தாக்கல் செய்யப்பட்டு 10 ஆண்டுகளாகியும் அதன் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்பட வில்லை.
வடக்கில் எனது நண்பர் இராம் அவதேஷ் சிங், தெற்கில் எனது மதிப்புக்குரிய ஆனைமுத்து ஆகியோர் கொடுத்த தொடர் அழுத்ததின் காரணமாக மத்திய அரசு வேலைவாய்ப்புகளில் மட்டும் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27% இட ஒதுக்கீடு வழங்கப்படும் என்று 07.08.1990 அன்று வி.பி.சிங் அறிவித்தார். அதற்கான அரசாணையை அவரது அரசு ஆகஸ்ட் 13&ஆம் தேதி வெளியிட்டது. அடுத்த இரு நாட்களில் நடைபெற்ற இந்திய விடுதலை நாள் விழாவிலும் 27% இட ஒதுக்கீடு உடனடியாக செயல்படுத்தப்படும் என்று வி.பி.சிங் அறிவித்தார்.
பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இட ஒதுக்கீடு அறிவிக்கப்பட்டதுமே அதற்கு எதிராக உயர்சாதி மக்களும் மாணவர்களும் தொடர் போராட்டங்களை நடத்தினார்கள். இட ஒதுக்கீடு அறிவிப்பு வெளியான உடனேயே அதற்கு எதிரான போராட்டம் வெடித்தது. அந்த ஆண்டின் செப்டம்பர் 19&ஆம் தேதி தில்லியில் தேசபந்து கல்லூரி மாணவர் ராஜிவ் கோஸ்வாமி இட ஒதுக்கீட்டை எதிர்த்து தீக்குளித்தார். அதைத் தொடர்ந்து வி.பி.சிங்கின் முடிவால் தங்களின் அரசாங்க வேலை குறித்த கனவு கலைந்து விட்டதாக கருதிய உயர்சாதி மாணவர்கள் பலர், தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டனர்.
வட மாநிலங்களில் மட்டும் 200&க்கும் மேற்பட்ட மாணவர்கள் தீக்குளித்தனர். அவர்களில் 62 மாணவர்கள் உயிரிழந்தனர். வட இந்தியா முழுவதும் மிகப்பெரிய போராட்டங்கள் வெடித்தன. கடைகள் மூடப்பட்டன. அரசு அலுவலகங்கள் தாக்கப்பட்டன. போராட்டங்களும், பேரணிகளும் பெருமளவில் நடந்தன. 6 மாநிலங்களில் போராட்டங்களை ஒடுக்குவதற்காக காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச் சூடுகளில் மட்டும் 50 பேருக்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். அதேநேரத்தில் சமூகநீதியின் தொட்டிலான தென்னிந்தியாவில் இடஒதுக்கீட்டுக்கு எதிராக போராட்டம் நடக்கவில்லை.
அந்த நேரத்தில் வி.பி.சிங்குக்கு ஆதரவாக ஒட்டுமொத்த பிற்படுத்தப்பட்ட மக்களும் அணி திரண்டு இருக்க வேண்டும். ஆனால், அவ்வாறு நடக்கவில்லை. பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு இட ஒதுக்கீடு அளித்ததற்காக உயர்சாதி மக்கள் வி.பி.சிங்குக்கு எதிராக திரண்டதன் காரணத்தை புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால், பிற்படுத்தப்பட்ட மக்கள் வி.பி.சிங்கை கைவிட்டதன் காரணத்தை புரிந்து கொள்ள முடியவில்லை. ஆனால், அந்த நேரத்திலும் தமிழ்நாடு உள்ளிட்ட தென்னிந்திய மக்கள் வி.பி.சிங்குக்கு ஆதரவாக இருந்தனர் என்பது தான் ஆறுதலான விஷயமாகும்.
நாளை.... ஓங்கி ஒலித்த ஆதரவுக் குரலும், ஓட்டமும் நடையுமான பேரணியும்!
( வி.பி.சிங் அவர்களின் 92-ஆவது பிறந்தநாளையொட்டிய குறுந்தொடர்)
No comments:
Post a Comment