வி.பி.சிங்கின் சமூகநீதி: எதிர்த்த வடக்கும், ஆதரித்த தமிழகமும் - மருத்துவர் இராமதாசு அய்யா நினைவுகள். - Agnipuratchi

வி.பி.சிங்கின் சமூகநீதி: எதிர்த்த வடக்கும், ஆதரித்த தமிழகமும் - மருத்துவர் இராமதாசு அய்யா நினைவுகள்.

Share This

வி.பி.சிங்கின் சமூகநீதி: எதிர்த்த வடக்கும், ஆதரித்த தமிழகமும்  - மருத்துவர் இராமதாசு அய்யா நினைவுகள்.

2. ஓங்கி ஒலித்த ஆதரவுக் குரலும்,
ஓட்டமும், நடையுமான பேரணியும்!

மத்திய அரசின் வேலைவாய்ப்புகளில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27% இட ஒதுக்கீடு வழங்குவதற்கான அறிவிப்பை வெளியிட்ட வி.பி.சிங் அவர்களைக் கண்டித்து வட இந்தியாவில் போராட்டங்கள் வெடித்த நிலையில், தென்னிந்தியாவைப் பொறுத்தவரை வி.பி.சிங் அவர்களுக்கு ஆதரவாகவே மக்கள் இருந்தனர். தமிழ்நாட்டில் பாட்டாளி மக்கள் கட்சி வி.பி.சிங்குக்கு ஆதரவாக பல்வேறு இயக்கங்களை நடத்தியது. அனைத்து நிகழ்ச்சிகளையும் நானே தலைமையேற்று நடத்தினேன்.

பாட்டாளி மக்கள் கட்சி அடிப்படையிலேயே சமூகநீதிக் கட்சி. பாட்டாளி மக்கள் கட்சி 1989-ஆம் ஆண்டு ஜூலை 16-ஆம் தேதி தொடங்கப்பட்டது. அடுத்த 13 மாதங்களில் அதாவது 1990-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 7-ஆம் தேதி மண்டல் ஆணையத்தின் பரிந்துரைப்படி மத்திய அரசு மற்றும் பொதுத்துறை நிறுவன வேலைவாய்ப்புகளில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27% இட ஒதுக்கீடு  வழங்கப்படும் என்று அப்போதைய பிரதமர் வி.பி.சிங் அவர்கள் அறிவித்தார். இடைப்பட்ட காலத்தில்  மண்டல் ஆணையத்தின் பரிந்துரைகளை செயல்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தி தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் ஏராளமான போராட்டங்களை பாட்டாளி மக்கள் கட்சி நடத்தியது.

மண்டல் ஆணையத்தின் பரிந்துரைகள் செயல்படுத்தப்படும் என்று அறிவிப்பு வெளியானதுமே அதற்கு  எதிராக வட மாநிலங்களில் போராட்டங்கள் வெடித்தன. தமிழகத்தில் மண்டல் ஆணைய பரிந்துரை செயல்படுத்தப்படும் என்ற அறிவிப்புக்கு பெரிய அளவில் எதிர்ப்பு எழவில்லை. ஆனால், காஞ்சிபுரம்  நகரத்தில் ஒரு சில முணுமுணுப்புகள் எழுந்தன. அந்த நேரத்தில் மண்டல் ஆணையத்தின் பரிந்துரைகளை செயல்படுத்தியதற்காக பிரதமர் வி.பி.சிங் அவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் மாவட்டத் தலைநகரங்களில் நன்றி அறிவிப்பு பேரணிகளை நடத்த பாட்டாளி மக்கள் கட்சி முடிவு செய்தது.

நன்றி அறிவிப்பு பேரணிகள்

முதல் நன்றியறிவிப்பு பேரணி காஞ்சிபுரத்தில் நடைபெற்றது. எனது தலைமையில் நடைபெற்ற பேரணியில் பா.ம.க. தலைவர் பேராசிரியர் தீரன், சி.ஆர்.பாஸ்கரன் உள்ளிட்ட நிர்வாகிகளும், தொண்டர்களும் அதிக அளவில் கலந்து கொண்டனர். மண்டல் ஆணையத்தின் பரிந்துரைகளை செயல்படுத்திய பிரதமர் வி.பி.சிங் அவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில், ‘‘ வாழிய, வாழிய, வாழியவே.... வி.பி.சிங் வாழியவே.... மண்டல் ஆணையப் பரிந்துரைகளை நிரைவேற்றிய வி.பி.சிங் வாழியவே’’ என்று உரத்தக் குரலில் ஆக்ரோஷமாக முழக்கமிட்டுக் கொண்டே நான் வேகமாக நடந்து முன்னே செல்வேன். அதே முழக்கத்தை ஒலித்துக் கொண்டே மற்றவர்கள் என்னை பின்தொடர்ந்து வருவார்கள். நான் நடந்து செல்லும் வேகத்துக்கு ஈடு கொடுக்க முடியாமல் நிர்வாகிகளில் பலர் வேகமாக ஓடி வருவார்கள். அந்த அளவுக்கு பாட்டாளி மக்கள் கட்சியின் நன்றி அறிவிப்பு பேரணிகள் உற்சாகமாக நடந்தன.

வேலூர் உள்ளிட்ட இரு மாவட்டத் தலைநகரங்களில் நடைபெற்ற நன்றி அறிவிப்புப் பேரணிகளில் மார்க்சீய, பெரியாரிய பொதுவுடைமைக் கட்சியின் நிறுவனர் பெரியவர் ஆனைமுத்து அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்கள். 24.10.1990-இல் விழுப்புரத்தில் நன்றி அறிவிப்புப் பேரணியை நானே தலைமையேற்று நடத்தினேன். ஒரு மாத அவகாசத்திற்குள் தமிழ்நாட்டில் பெரும்பான்மையான மாவட்டங்களில் நன்றி அறிவிப்பு பேரணிகளை பாட்டாளி மக்கள் கட்சி நடத்தியது குறிப்பிடத்தக்கது.
நாளை.... தமிழகத்தில் முழு அடைப்பு

( வி.பி.சிங் அவர்களின் 92-ஆவது பிறந்தநாளையொட்டிய குறுந்தொடர்)

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages