எங்கே தமிழ்? - பாமக நிறுவனர் மருத்துவர் இராமதாசு அய்யா வினா?. - Agnipuratchi

எங்கே தமிழ்? - பாமக நிறுவனர் மருத்துவர் இராமதாசு அய்யா வினா?.

Share This

எங்கே தமிழ்?  - பாமக நிறுவனர் மருத்துவர் இராமதாசு அய்யா வினா?.

தமிழை வீழ்த்தியவர்கள் யார்?

16. உயர்நீதிமன்றத்தில் தமிழ்... ஓர் உன்னத முயற்சி!

பள்ளிகளில் தமிழை பயிற்றுமொழியாக ஆக்குவதைப் போலவே தமிழ்நாட்டில் உள்ள சென்னை உயர்நீதிமன்றம், அதன் மதுரைக் கிளை ஆகியவற்றிலும் தமிழை அலுவல் மொழியாக்க வேண்டும் என்பது தமிழறிஞர்கள் மற்றும் தமிழ் உணர்வாளர்களின் நீண்ட நாள் கனவாகும். அது பல ஆண்டுகளாக கனவாகவே இருந்ததும், இப்போது நிறைவேறாத கனவாக இருப்பதும் தான் மிகவும் வருத்தமான விஷயம்.

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 348 -ஆவது பிரிவின்படி இந்திய உச்சநீதிமன்றத்திலும், உயர்நீதிமன்றங்களிலும் ஆங்கிலம் மட்டும் தான் அலுவல் மொழியாக இருக்க வேண்டும். இந்த நீதிமன்றங்களில்  வழக்கு விசாரணை ஆங்கிலத்தில் தான் நடத்தப்பட வேண்டும்; வழக்கின் தீர்ப்பும் ஆங்கிலத்தில் தான் எழுதப்பட வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

அரசியலமைப்பு சட்ட விதி

எனினும், இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின்348(2) ஆவது பிரிவின்படி உயர்நீதிமன்றத்தின் ஆட்சி மொழியாக இந்தி அல்லது சம்பந்தப்பட்ட மாநிலத்தின் மொழியை அறிவிக்க குடியரசுத் தலைவருக்கு அதிகாரம் உண்டு. அதன்படி சென்னை உயர்நீதிமன்ற அலுவல் மொழியாக தமிழை அறிவிக்க முடியும்.

இந்த அதிகாரத்தைப் பயன்படுத்தி அலகாபாத், பாட்னா, மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான் ஆகிய உயர்நீதிமன்றங்களின் வழக்காடும் மொழியாக இந்தி அறிவிக்கப்பட்டுள்ளது. அதே வழியில் சென்னை உயர்நீதிமன்றத்தின் வழக்காடும் மொழியாகத் தமிழை அறிவிப்பதில் எந்த சிக்கலும் இல்லை என்பதால் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 348(2) ஆவது பிரிவைப் பயன்படுத்தி  சென்னை உயர்நீதிமன்றத்தின் அலுவல் மொழியாக தமிழை அறிவிக்க வேண்டும் என்று நான் தொடர்ந்து வலியுறுத்தி வந்தேன். இக்கோரிக்கைக்கு தமிழறிஞர்களிடமும், வழக்கறிஞர்களிடமும் ஆதரவு இருந்தது.

பாட்டாளி மக்கள் கட்சி கோரிக்கை

2006-ஆம் ஆண்டு பா.ம.க. ஆதரவுடன் திமுக ஆட்சி நடைபெற்றதால், எனது கோரிக்கைகளில் சிலவற்றை முதலமைச்சர் கலைஞர் நிறைவேற்றி வைத்தார் என்று கூறியிருந்தேன் அல்லவா? அவற்றில்  சென்னை உயர்நீதிமன்றத்தின் அலுவல் மொழியாக தமிழை அறிவிக்க வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்பதும் ஒன்றாகும். அதை ஏற்றுக் கொண்டு  22.11.2006 அன்று  சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய கலைஞர், இது குறித்த அறிவிப்பை வெளியிட்டார். அதன் விவரம் வருமாறு:

“சென்னை உயர்நீதிமன்ற நடவடிக்கைகள் அனைத்திலும், இதுவரையில் ஆங்கில மொழியே வழக்கு மொழியாக இருந்து வருகிறது. இந்திய அரசியல் சாசனத்தின் சட்டப்பிரிவு 348இல் உயர் நீதிமன்றத்திலும் மற்றும் உச்ச நீதிமன்றத்திலும் ஆங்கில மொழியிலேயே அனைத்து நடவடிக்கைகளும் நடத்தப்பட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. அதன்படி ஆங்கில மொழியே சென்னை உயர்நீதிமன்ற நடவடிக்கைகள் அனைத்திலும் உபயோகப்படுத்தப்பட்டு வருகிறது.

எனினும், அரசியல் சாசனச் சட்டப் பிரிவு 348, உட்பிரிவு (2)இல் மாநில மொழியில் உயர் நீதிமன்ற நடவடிக்கைகள் அனைத்தும் நடைபெற வேண்டுமென்றால் குடியரசுத் தலைவரின் ஒப்புதல் பெற்று மாநில அரசு உரிய சட்ட நடவடிக்கை எடுக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது. மேலே கூறப்பட்டுள்ள அரசியல் சாசனச் சட்டப் பிரிவைப் பயன்படுத்தி சென்னை உயர் நீதிமன்றத்தில் அனைத்து நடவடிக்கைகளிலும் வழக்கு மொழியாக நமது தாய்மொழியாம் தமிழை அறிமுகப் படுத்திடத் தமிழக அரசு முடிவெடுத்துள்ளது” என்று முதலமைச்சர் கலைஞர் அறிவித்தார். அதை நான் வரவேற்றேன்.

பேரவைத் தீர்மானத்தின் விவரம்

முதலமைச்சர் கலைஞர் அறிவித்தவாறு அரசியல் சட்ட மேதை அம்பேத்கரின் நினைவு நாளான திசம்பர் 6&ஆம் தேதி இதற்கான தீர்மானத்தை தமிழக சட்டப்பேரவையில் கலைஞர் தாக்கல் செய்தார். தீர்மானத்தின் விவரம் வருமாறு:

“சென்னை உயர்நீதிமன்ற நடவடிக்கைகள் அனைத்திலும் இதுவரையில் ஆங்கில மொழியே வழக்கு மொழியாக இருந்து வருகிறது. இந்திய அரசமைப்புச் சட்டத்தின் 348 (1) ஆவது பிரிவின்படி உயர் நீதிமன்றத்திலும் உச்ச நீதிமன்றத்திலும் ஆங்கில மொழியிலேயே அனைத்து நடவடிக்கைகளும் இருந்திட வேண்டுமென்று கூறப்பட்டுள்ளது. எனினும், அரசமைப்புச் சட்டப் பிரிவு 348 உட்பிரிவு (2) உடன் இணைந்த 1963ஆம் ஆண்டு ஆட்சி மொழிச் சட்டப் பிரிவு 7இன் படி, உயர் நீதிமன்ற நடவடிக்கைகள் அனைத்தையும் மேதகு இந்தியக் குடியரசுத் தலைவர் அவர்களின் ஒப்புதலைப் பெற்று, மாநில ஆட்சி மொழியிலேயே நடத்த மாநில அரசு உரிய நடவடிக்கை எடுத்திட வழி வகை செய்யப்பட்டுள்ளது.

நமது மாநிலத்தில் தமிழிலேயே அனைத்து நிர்வாக நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட வேண்டுமென்ற கொள்கையின் அடிப்படையில், அரசமைப்புச் சட்டப் பிரிவு 348 உட்பிரிவு (2) உடன் இணைந்த 1963ஆம் ஆண்டு ஆட்சி மொழிச் சட்டப் பிரிவு 7இன்படி சென்னை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்புகள், தீர்ப்பாணைகள் உள்ளிட்ட அனைத்து நடவடிக்கைகளிலும் நமது மாநில ஆட்சி மொழியாகிய தமிழை அறிமுகப்படுத்திட தமிழக அரசு முடிவெடுத்துள்ளது. தமிழக வரலாற்றில் பொன்னெழுத்துக் களால் பொறிக்கப்பட வேண்டிய இம்முடிவினை செயற்படுத்த விரைவில் ஒப்புதல் வழங்க வேண்டுமென மேதகு இந்தியக் குடியரசுத் தலைவர் அவர்களைக் கேட்டுக் கொள்வதென இந்தச் சட்டமன்றப் பேரவையில் இத்தீர்மானம் ஏகமனதாக நிறை வேற்றப்படுகிறது” என்று அத்தீர்மானத்தில் கூறப்பட்டிருந்தது.

கலைஞர் பாராட்டு

அதைத் தொடர்ந்து குரல் வாக்கெடுப்பின் மூலம் இந்தத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. திமுக, பாட்டாளி மக்கள் கட்சி, காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள் ஆகிய கட்சிகளின் உறுப்பினர்கள்  தீர்மானத்திற்கு ஆதரவு தெரிவித்தனர். அதிமுகவும், அதன் கூட்டணிக் கட்சியான மதிமுகவும் இது குறித்த அவை நிகழ்ச்சிகளை புறக்கணித்தன. தீர்மானம் நிறைவேற்றப்பட்ட பிறகு இது குறித்து பேசிய கலைஞர்,‘‘ இந்தத் தீர்மானம் வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய தீர்மானம் ஆகும். நம்முடைய நண்பர் மணி அவர்கள் குறிப்பிட்டத்தைப் போல, பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனத் தலைவர் மருத்துவர் அய்யா இராமதாஸ் அவர்கள் இதை எத்தனையோக் கூட்டங்களில் கூறியிருக்கிறார்’’ என்றும் கூறி  எனக்கு பாராட்டு தெரிவித்தார்.

சென்னை உயர்நீதிமன்றத்தின் அலுவல் மொழியாக தமிழைக் கொண்டு வருவதற்கான முயற்சிகளுக்கு சென்னை உயர்நீதிமன்றத்தின் அப்போதைய தலைமை நீதிபதி அஜித் பிரகாஷ் ஷா அளித்த ஆதரவு  குறிப்பிடத்தக்கதாகும். சென்னை உயர்நீதிமன்றத்தின் அலுவல் மொழியாக தமிழை அறிவிக்கக் கோரி சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்படுவது குறித்த அறிவிப்பை கலைஞர் வெளியிட்டதுமே, அந்த முடிவுக்கு சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ஏ.பி.ஷா ஆதரவு தெரிவித்தார். அத்துடன்  தமிழை அலுவல் மொழியாக்க வேண்டுமானால், அதற்காக அரசு என்னென்ன வசதிகளை ஏற்படுத்த வேண்டும் என்பது குறித்து ஆலோசனை வழங்கி தமிழக அரசுக்கு கடிதம் ஒன்றையும் அவர் எழுதினார். அக்கடிதத்தில் அவர் முன்வைத்திருந்த 12 ஆலோசனைகளின் விவரங்கள் வருமாறு:

தலைமை நீதிபதி யோசனைகள்

1. சென்னை உயர் நீதிமன்றத்திலும் மற்றும் கீழமை நீதிமன்றங்களிலும் தமிழில் வெளிவந்துள்ள சட்ட நூல்கள், இதழ்கள் அடங்கிய கிளை நூலகம் உருவாக்கிட வேண்டும்.

2. தமிழ் மென்பொருள் உயர் நீதிமன்றத்தில் அமைத்து அனைத்து கணிப்பொறியிலும் பொருத்துவதற்கு சிறப்பு நிதி ஒதுக்கிட வேண்டும்.

3. கணிப்பொறியை இயக்கத் தெரிந்த தமிழ் சுருக்கெழுத்தாளர்கள் நியமித்திட வேண்டும்.

4. தமிழிலிருந்து ஆங்கிலத்திற்கும், ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கும் மொழிபெயர்த்திட, மொழி பெயர்ப்புக் குழு ஏற்படுத்திட வேண்டும்.

5. தமிழில் மூல சட்ட நூல்கள், சட்ட விளக்க நூல்கள் அனைத்தும் கொண்டு வர சிறப்பு திட்டம் உருவாக்க வேண்டும்.

6. தமிழில் வெளிவருகின்ற சட்ட நூல்களுக்கு சிறப்பு மானியம் வழங்கிட வேண்டும்.

7. தமிழில் வெளிவரும் சட்ட இதழ்களுக்கும் சிறப்பு மானியம் வழங்கிட வேண்டும்.

மாநில ஆட்சி மொழி ஆணையம்

8. மாநில ஆட்சி மொழி ஆணையத்தை விரைவில் உருவாக்கிட வேண்டும்.

9. உயர்நீதிமன்றத்தில் தமிழை நடைமுறைப் படுத்துவதற்காக மூத்த நீதிபதி தலைமையில் ஒரு குழு ஏற்படுத்திட வேண்டும்.

10. சட்ட கலைச்சொற்கள் உருவாக்க தனிக்குழு நியமித்திட வேண்டும்.

11. தமிழில் வெளிவந்து கொண்டிருக்கின்ற சட்டக்கதிர், தீர்ப்புத் திரட்டு இந்த இரண்டு இதழ்களும் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பொது நூலகங்கள், ஊராட்சிமன்ற படிப்பகங்கள், கல்லூரிகள், பல்கலைக் கழகங்கள், நீதிமன்றங்களின் நூலகங்கள் அனைத்திலும் இடம்பெற சிறப்பு அனுமதியை வழங்கிட வேண்டும்.

12. அரசு விளம்பரங்களை சட்டக்கதிர் இதழில் வெளியிட சிறப்பு உத்தரவினை வழங்கிட வேண்டும். சட்டக் கதிருக்கென சிறப்பு மானியம் வழங்கிட வேண்டும்.

தலைமை நீதிபதியின் யோசனைகளை ஏற்றுக் கொண்ட தமிழக முதலமைச்சர் கலைஞர், இவை அனைத்தையும் தமிழக அரசு செய்து கொடுக்கும் என்று தமிழக சட்டப்பேரவையிலேயே உறுதியளித்தார்.

சென்னை உயர்நீதிமன்றத்தின் அலுவல் மொழியாக தமிழை அறிவிக்க அனைத்து தரப்பினரும் ஆதரவு அளித்தனர். அதுமட்டுமின்றி மத்திய அரசில் திமுக அசைக்க முடியாத செல்வாக்குடன் இருந்தது. தமிழை அலுவல் மொழியாக அறிவித்து ஆணை பிறப்பிக்க வேண்டிய குடியரசுத் தலைவர் பதவியில் தமிழ் ஆர்வம் மிக்க தமிழரான அப்துல்கலாம் இருந்தார். இதனால் சென்னை உயர்நீதிமன்ற அலுவல் மொழியாக தமிழ் அறிவிக்கப்படும் என்று தமிழக மக்கள் அனைவரிடமும் நம்பிக்கை நிறைந்த எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால், அடுத்த சில மாதங்களிலேயே அந்த எதிர்பார்ப்பு ஏமாற்றமானது.

நாளை.... உயர்நீதிமன்றத்தில் தமிழ்.... முடங்கிப் போன முயற்சி!

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages