கல்விக்கோயில் வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள கோயில் மரங்கள் வட்டமும் (Temple Trees Circle), அதை உருவாக்கியவர்களுடன் மகிழ்ச்சி பரிமாறலும்! - பாமக நிறுவனர் மருத்துவர் இராமதாசு அய்யா
திண்டிவனம் கோனேரிக்குப்பத்தில் செயல்பட்டு வரும் கல்விக்கோயில் வளாகம் அரியவகை மரங்களின் காப்பகமாக திகழ்கிறது. தாவரவியல் வல்லுனர்களால் கூட கண்டுபிடிக்க முடியாத அளவுக்கு பல்வேறு அரிய மற்றும் புதிய வகை மரங்கள் கல்விக்கோயில் வளாகத்தில் வளர்க்கப்பட்டு வருகின்றன என்பதை பல்வேறு தருணங்களில் உங்களுடன் பகிர்ந்து கொண்டிருக்கிறேன்.
கல்விக்கோயில் வளாகத்தில் உள்ள மரங்களை அடையாளப்படுத்தி, அவற்றின் தன்மைகளையும், சிறப்புகளையும் ஆவணப்படுத்துபவர்களுக்கு ரூ. 1 லட்சம் பரிசு வழங்கப்படும் என்று அறிவித்திருந்தேன். ஆனாலும் இந்த அறைகூவலை ஏற்க எவரும் முன்வரவில்லை.
அத்தகைய சிறப்பு மிக்க கல்விக்கோயில் வளாகத்திற்கு மேலும் அழகு சேர்க்கும் வகையில் வளாகத்தின் மையப்பகுதியில் உள்ள மூன்று சாலைகள் சந்திக்கும் சந்திப்பில் கோயில் மரங்கள் வட்டம் (Temple Trees Circle) அமைக்கப்பட்டிருக்கிறது.
கோயில் மரங்கள் வட்டம் 250 அடி ஆரமும், 500 அடி விட்டமும் கொண்டது. மொத்தம் சுமார் 2 லட்சம் சதுர அடி, அதாவது நான்கரை ஏக்கர் பரப்பளவில் இது அமைந்துள்ளது. அந்த வட்டத்தில் 1850 கோயில் மரங்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன. டெம்பிள் ட்ரீ எனப்படும் கோயில் மரங்களின் உயிரியல் பெயர் ப்ளூமேரியா என்பதாகும். ப்ளூமேரியா குடும்பத்தைச் சேர்ந்த ப்ளூமேரியா புடிக்கா வகை மரங்கள் 100, ப்ளூமேரியா ரூப்ரா ( சிவப்பு) வகை மரங்கள் 150, ப்ளூமேரியா டுவார்ஃப் (குட்டை வெள்ளை) வகை மரங்கள் 1500 ஆகியவை கோயில் மரங்கள் வட்டத்தில் நடப்பட்டிருக்கின்றன.
கோயில் மரங்கள் வட்டத்தின் மையத்தில் வெண்மை நிற ப்ளூமேரியா புடிக்கா வகை மரங்கள் 100 நடப்பட்டிருக்கின்றன. அடுத்த அடுக்கில் ப்ளூமேரியா ரூப்ரா ( சிவப்பு) வகையைச் சேர்ந்த 150 மரங்களும், வெளிவட்டத்தில் ப்ளூமேரியா டுவார்ஃப் (குட்டை வெள்ளை) வகையைச் சேர்ந்த 1500 மரங்களும் நடப் பட்டுள்ளன.
இவற்றில் ப்ளூமேரியா டுவார்ஃப் மிகவும் குட்டையானவை. ப்ளூமேரியா ரூப்ரா அதை விட சற்று உயரம் அதிகமானவை. உள்வட்டத்தில் நடப்பட்டிருக்கும் ப்ளூமேரியா புடிக்கா அதிக உயரம் கொண்டவை. அதனால் மலர்கள் மலர்ந்திருக்கும் காலத்தில் கோயில்கள் மரங்கள் வட்டத்தை பார்த்தால் முதல் அடுக்கில் குட்டை வெள்ளை மலர்கள், அடுத்த அடுக்கில் நடுத்தர உயரம் கொண்ட ரூப்ரா சிவப்பு மலர்களும், உள் வட்டத்தில் புடிக்கா வகை வெள்ளை மலர்களும் அடுக்கடுக்காக காட்சியளிக்கும். அதை பார்ப்பதற்கே கண்கொள்ளாகாட்சியாக இருக்கும்.
கோயில் மரங்கள் வட்டத்தை உருவாக்கும் பணிகள் கடந்த அக்டோபர் 26-ஆம் தேதி தொடங்கியது. அந்த பணியை நான் தொடங்கி வைத்தேன். இந்த மரங்கள் கொல்கத்தாவிலிருந்து கொண்டு வரப்பட்டு ஆந்திர மாநிலம் ராஜமுந்திரியில் வைத்து தென்னிந்திய தட்பவெப்ப நிலைக்கு ஏற்ற வகையில் தெளிய வைக்கப்பட்டு கல்விக்கோயில் வளாகத்திற்கு கொண்டு வரப்பட்டிருக்கின்றன.ப்ளூமேரியா வகை மரக்கன்றுகளை நடும் பணியை கிழக்குக் கடற்கரை சாலையில் நர்சரி நடத்தி வரும் பெருமாள் என்பவரின் புதல்வர் தீனதயாளன் என்பவர் தான் மேற்கொண்டு வருகிறார்.
கல்விக்கோயிலை சேர்ந்த 26 பெண் பணியாளர்கள், 9 ஆண் பணியாளர்கள் என மொத்த 35 பேர் இந்த பணியில் தொடர்ச்சியாக ஈடுபட்டனர். இவர்கள் தவிர நர்சரி நிறுவனத்தைச் சேர்ந்த 6 ஊழியர்கள் எந்த மரக்கன்றை எங்கு நடுவது என்பதை நிலத்தை அளந்து மார்க் செய்யும் பணியில் ஈடுபட்டனர். இந்த மரங்களுக்கு அதிக அளவில் தண்ணீர் தேவைப்படாது; இந்த மரங்கள் முழுக்க முழுக்க இயற்கை உரங்களை கொண்டு வளர்க்கப்படுகின்றன. இதற்கான உரங்கள் பண்ருட்டி பகுதியிலிருந்து வரவழைக்கப் பட்டுள்ளன.
கோயில் மரங்கள் வட்டத்தை உருவாக்குவதற்காக பணியாற்றியவர்களை பாராட்டும் வகையிலும், அவர்களுடன் மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்ளும் வகையிலும் நாளை (20.11.2022) ஞாயிற்றுக்கிழமை நண்பகல் 12.00 மணிக்கு விருந்து நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியில் நானும், சமூக முன்னேற்ற சங்கத்தின் தலைவர் பேராசிரியர் ச.சிவப்பிரகாசமும் கலந்து கொள்கிறோம். பெண் பணியாளர்களுக்கு புடவைகளும், ஆண் பணியாளர்களுக்கு வேட்டி, சட்டையும் வழங்கப்படவுள்ளன. அனைவருக்கும் ஊக்கத் தொகையும் வழங்கவிருக்கிறேன். உழைக்கும் மக்களுடன் எனது மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்ளும் போது அது இரு மடங்காகும் என்பது நீங்கள் அறிந்தது தானே!
No comments:
Post a Comment