அக்னிப்புரட்சி இன்றைய (25.12.2022) முக்கிய செய்திகள்.
* உலகம் முழுவதும் களைகட்டிய கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்:
உலகம் முழுவதும் உள்ள தேவாலயங்களில் இயேசு நாதர் பிறந்த கிறிஸ்துமஸ் தினத்தை ஏராளமான மக்கள் கொண்டாடி வருகின்றனர்.
புத்தாடை அணிந்து, சிறப்பு திருப்பலியில் கிறிஸ்தவர்கள் உற்சாகம்.
உலக புகழ் பெற்ற வேளாங்கண்ணி மாதா பேராலயத்தில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் விழாவில் பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்பு.
ஏசு கிறிஸ்து பூவுலகில் பிறந்த நற்செய்தியை வேளாங்கண்ணி பேராலய அதிபர் இருதயராஜ் வாசித்தார்.
* திருவரங்கம் அரங்கநாதர் கோயில் வைகுண்ட ஏகாதசி பகல்பத்து உற்சவ 3ம் நாள்: இன்று (25.12.2022) திரு நம்பெருமாள் சவுரி கொண்டை, ரத்தின நெத்திச்சூடி, ரத்தின காதுகாப்பு, ரத்தின கிளி, ரத்தின அபயஹஸ்தம், பவளமாலை, பஞ்சாயுத மாலை முத்துமாலை, அடுக்குப்பதக்கம் உள்ளிட்ட திரு ஆபரணங்கள் அணிந்து புறப்பாடாகி அர்ச்சுன மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு சேவை சாதித்தார்.
* இந்தியா-வங்கதேசம் 2வது டெஸ்ட்: 3 விக்கெட்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி.
145 ரன்கள் இலக்கை துரத்திய இந்தியா அடுத்தடுத்து விக்கெட்களை இழந்து 74 ரன்னுக்கு 7 விக்கெட்கள் இழந்து தடுமாறியது.
அஸ்வின் மற்றும் ஷ்ரேயாஸ் ஐயர் ஜோடி வெற்றி பாதைக்கு அழைத்துச் சென்றது.
* வாகன விபத்தில் 16 பேர் உயிரிழப்பு!
அமெரிக்கா: கடும் பனிப்பொழிவால் பல இடங்களில் 50க்கும் மேற்பட்ட வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து. ஓஹியோ பகுதியில் நடந்த விபத்தில் வாகனங்கள் குவிந்து காணப்பட்டன. இதில் 16 பேர் உயிரிழப்பு!
அந்நாட்டில் நிலவும் கடும் பனிப்புயலால் இயல்பு வாழ்க்கை பாதிப்பு. வெப்பநிலை -45டிகிரி அளவுக்கு கீழ் சென்றுள்ளது.
* பான் எண்ணுடன் ஆதாரை இணைக்க இறுதிக்கெடு அறிவிப்பு!
அடுத்தாண்டு மார்ச் 31ம் தேதிக்குள் பான் கார்டு உடன் ஆதார் எண்ணை இணைக்காவிட்டால் பான் கார்டு செயலிழந்து விடும் என வருமான வரித்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது!
ஒரே நபர் ஒன்றுக்கும் மேற்பட்ட பான்கார்டுகளை பயன்படுத்துவதை தடுக்க, அதனை ஆதாருடன் இணைக்க மத்திய அரசு உத்தரவு!
* முன்னாள் இந்திய பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாயின் பிறந்தநாள் - தலைவர்கள் மரியாதை!
டெல்லியில் உள்ள அவரின் நினைவிடத்தில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, பிரதமர் மோடி, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மற்றும் அமைச்சர்கள் உள்ளிட்டோர் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.
* ஆசிய கோப்பை வில்வித்தை போட்டியில் இந்திய ஆடவர் அணி தங்கப்பதக்கம் வென்றுள்ளது.
பிரியன்ஸ், ஓஜாஸ், கணேஷ்ராவ் ஆகியோர் அடங்கிய இந்திய ஆடவர் அணி தங்கப் பதக்கம் வென்று அசத்தியுள்ளது.
* டாக்டர்களின் மோசமான கையெழுத்தை இனி கூகுள் படித்துக் காட்டிவிடும்.
இந்த உலகத்தில் நாம் புரிந்துகொள்வதற்கு மிகக் கடினமாக இருக்கும் விஷயங்களில் ஒன்று, டாக்டர்கள் எழுதித் தரும் மருந்து சீட்டுகள்.
அவர் என்ன எழுதிஉள்ளார் என்பது நமக்கு தெரியாவிட்டாலும் கூட பரவாயில்லை, மருந்து கடைக்காரர்களுக்கே பல நேரங்களில் புரிவதில்லை.
சில சமயங்களில் அவர்கள் தவறான மருந்தைக் கூட தந்துவிடும் வாய்ப்பு உள்ளது. இந்தப் பிரச்னையை தீர்க்க, 'கூகுள்' நிறுவனம் முன்வந்துள்ளது.
டாக்டர்களின் கையெழுத்தைப் புரிந்து கொண்டு, என்ன எழுதப்பட்டு உள்ளது என்பதை நமக்கு தருவதற்காக, ஒரு செயலியை தயார் செய்து வருகிறது. இதற்காக மருந்தாளுனர்களுடன் கூட்டு வைத்துள்ளது.
இதற்கான செயலி வாயிலாக மருந்து சீட்டை போட்டோ எடுத்தால், அதில் என்ன எழுதப்பட்டு உள்ளது என்பதை கூகுள் கண்டுபிடித்து, நமக்கு தந்துவிடும். இது சம்பந்தமான சோதனை முயற்சிகள் நடைபெற்று வருகின்றன.
விரைவில் கூகுளின் இந்த செயலி அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
TELEGRAM: t.me/agnipuratchi1
* கொரோனா பரவலை தடுக்க மத்திய அரசு தீவிரம், நாளை மறுநாள் ஒத்திகை நிகழ்ச்சி நடைபெறும்: மத்திய அரசு முடிவு
டெல்லி: கொரோனா சிகிச்சைக்கான ஏற்பாடுகள் தயார் நிலையில் உள்ளதை உறுதிப்படுத்த நாளை மறுநாள் நாடெங்கும் உள்ள மருத்துவமனைகளில் ஒத்திகை நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.
சீனாவில் பரவி வரும் புதிய வகை கொரோனா அந்நாட்டில் மிக பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில் இந்தியாவிலும் புது வகை கொரோனாவை தடுக்க மத்திய, மாநில அரசுகள் தீவிர நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன.
இதன் தொடர்ச்சியாக நாளை மறுநாள் நாடெங்கும் உள்ள மருத்துவமனைகளில் ஒத்திகை நிகழ்ச்சி நடை பெரும் என மத்திய சுகாதார துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதில் கொரோனா சிகிச்சை ஏற்பாடுகள் தயார் நிலையில் இருப்பது குறிப்பிடப்படும், ஆக்சிஜன் வசதிகள், ஐ.சி.யூ படுக்கைகள் உள்ளிட்டவை தயார் நிலையில் இருப்பதும் உறுதிசெய்யபட்டுள்ளது.
மருத்துவ துறை சார்ந்த அனைத்து பணியாளர்களும் இந்த ஒத்திகை நிகழ்ச்சியில் பங்கேற்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
TELEGRAM: t.me/agnipuratchi1
* துபாய் லாட்டரியில் ரூ.33 கோடி பரிசு
இந்திய டிரைவருக்கு அடித்தது ஜாக்பாட்..!
துபாய் ஆன்லைன் லாட்டரியில் நகைக்கடையில் பணிபுரியும் இந்தியாவை சேர்ந்த டிரைவர் ஒருவருக்கு ரூ.33 கோடி ஜாக்பாட் பரிசாக கிடைத்துள்ளது.
வாழ்க்கை அடுத்த நொடியில் எப்படி வேண்டுமானாலும் மாறலாம் என்பதற்கு உதாரணமாக இந்தியாவின் ஹைதராபாத்தை சேர்ந்த அஜய் ஓகுலா (31) என்பவருக்கு லாட்டரியில் அதிர்ஷ்டம் அடித்துள்ளது.
4 ஆண்டுகளுக்கு முன்பு ஐக்கிய அரபு எமிரேட்ஸில் மேய்ச்சல் நிலங்களை பராமரிக்கும் பணிக்காக சென்றவர். தற்போது அங்குள்ள நகைக்கடை நிறுவனத்தில் டிரைவராக பணிபுரிந்து வருகிறார்.
மாதந்தோறும் 3,200 திர்ஹாம் (அதாவது இந்திய மதிப்பில் ரூ. 71,968) சம்பளமாக பெற்று வருகிறார்.
இந்நிலையில், சமீபத்தில் நடந்த கிராண்ட் எமிரேட்ஸ் குலுக்கலில், அவருக்கு முதல் பரிசான 15 மில்லியன் திர்ஹாம் பரிசாக கிடைத்துள்ளது.
லாட்டரியில் ஜாக்பாட் அடித்தது குறித்து அஜய் ஓகுலா கூறுகையில்,
”நான் ஜாக்பாட் அடித்ததை இன்னும் என்னால் நம்ப முடியவில்லை. வழக்கமாக என்னுடைய முதலாளியிடம் லாட்டரியில் பணம் கிடைத்தால் எப்படியெல்லாம் வாழ்க்கை மாறும் என்பது குறித்து பேசுவேன். அதற்கு, அவர் தேவையில்லாமல் செலவிடும் பணத்தை அதில் முயற்சி செய்து பார்க்கலாமே என கூறினார்.
இதனையடுத்தே, எமிரேட்ஸ் டிரா மொபைல் செயலியை டவுன்லோடு செய்து 2 டிக்கெட் வாங்கினேன். லாட்டரியில் வென்றதாக இ-மெயில் வந்தபோது சிறிய தொகை என எண்ணியிருந்தேன்.
அதன் மதிப்பை அறிந்த போது, உறைந்து போய்விட்டேன். வார்த்தையே வரவில்லை.
இந்தத் தொகையைக் கொண்டு சொந்தமாக கட்டுமான நிறுவனம் துவங்க உள்ளேன். மேலும் ஒரு அறக்கட்டளையை உருவாக்க உள்ளேன்.
எனது கிராமத்தை சுற்றியுள்ள ஊர்களில் உள்ள பலருக்கு அடிப்படைத் தேவைகளை பெற உதவும். ஜாக்பாட் அடித்ததை எனது அம்மாவும், உடன்பிறந்தவர்களும் நம்பவே இல்லை. இப்போது நான் செய்திகளில் வருவதால் அவர்கள் நிச்சயம் நம்புவார்கள்.'
இவ்வாறு அவர் கூறினார்.
இதே குலுக்கலில், அஜய் ஓகுலாவுக்கு அடுத்ததாக 50 வயதான பிரிட்டனை சேர்ந்த பவுலா லீச் என்பவர், 77,777 பில்லியன் திர்ஹாமை வென்றார். 3 குழந்தைகளின் தாயான இவர், சுமார் 14 ஆண்டுகளாக ஐக்கிய அரபு எமிரேட்ஸில் மனித வள நிபுணராக பணியாற்றி வருகிறார்.
TELEGRAM: t.me/agnipuratchi1
* 17 லட்சம் பேர் மின்சாரமின்றி தவிப்பு: அமெரிக்காவில் பனிப்புயலுக்கு 18 பேர் பலி
அமெரிக்காவில் வரலாறு காணாத வகையில் கடும் பனிப்பொழிவு நிலவி வருகிறது. வெடிகுண்டு சூறாவளி என்று அழைக்கப்படும் இந்த பனிப்புயல் பல மாகாணங்களை தாக்கி வருகிறது.
இதனால் தொடர்ந்து பனி கொட்டியபடியே இருக்கிறது. பனிப்புயலால் அமெரிக்காவில் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. சாலைகளில் மலைபோல் பனி குவிந்து கிடக்கிறது. ரெயில் பாதைகள், விமான ஓடுபாதைகளில் பனி கொட்டிக்கிடக்கிறது.
இதனால் விமானங்கள், ரெயில்கள் சேவை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. தினமும் ஆயிரக்கணக்கான விமானங்கள் ரத்து செய்யப்படுகின்றன. பல இடங்களில் வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்கள் ஏற்பட்டன. இதில் உயிரிழப்புகளும் உண்டாகி இருக்கிறது.
அமெரிக்காவில் சூறாவளி பனிப்புயலுக்கு 18 பேர் பலியாகி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடும் குளிரை தாங்காமல் மக்கள் அவதிப்படுகிறார்கள். தங்கள் வீடுகளில் நெருப்பு மூட்டி குளிர் காய்ந்தாலும் வெப்பநிலை மைனஸ் 45 டிகிரி வரை சென்றுள்ளதால் மக்கள் தவித்து வருகிறார்கள். மேலும் பல மாகாணங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. சுமார் 17 லட்சம் பேர் மின்சாரமின்றி இருளில் தவிக்கிறார்கள்.
கடும் பனிப்பொழிவால் வெளியில் செல்ல முடியாத சூழலில் வீட்டுக்குள் மின்சாரம் இல்லாமல் குளிரில் உறைந்து போய் கிடக்கிறார்கள்.சாலைகள், மற்ற இடங்களில் கிடக்கும் பனிகளை அகற்ற நடவடிக்கைகள் எடுக்கப்படுகிறது.
ஆனாலும் இடைவிடாத பனிப்பொழிவு இருப்பதால் தொடர்ந்து பனி குவிந்துகொண்டே இருக்கிறது. அமெரிக்காவில் பனிப்பொழிவு காரணமாக கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் களையிழந்தது.
TELEGRAM: t.me/agnipuratchi1
* சென்னை எண்ணூரில் கடலில் குளித்துக் கொண்டிருந்தபோது ராட்சத அலை இழுத்துச் சென்றதில், வட மாநில இளைஞர்கள் 4 பேர் மாயம்
எண்ணூர் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து மாயமான 4 பேரையும் தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்
* கிறிஸ்துமஸ் பண்டிகை மற்றும் வார விடுமுறை நாள் என்பதால், பல்வேறு மாவட்டங்களில் இருந்து அதிகப்படியான வாகனங்கள் சென்னை திரும்பியுள்ளன; இதனால் செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் புறவழிச் சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
* சீனாவில் பணியாற்றி விடுமுறையில் ஆக்ரா வந்தவருக்கு பரிசோதனை செய்த போது கொரோனா உறுதியானது.
அறிகுறி ஏதும் இல்லாவிட்டாலும் வீட்டிலேயே அவர் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். சீனாவில் இருந்து வந்தவருடன் தொடர்பில் இருந்தவர்கள் யார், யார் என்பதை கண்டறியும் பணிகள் நடைபெற்று வருகிறது என்று கூறியுள்ளனர்.
* கோவை கார் சிலிண்டர் வெடித்த வழக்கு: 5 பேரை காவலில் எடுத்து வீடுகளில் சோதனை.!
என்ஐஏ அதிகாரிகள் விசாரணைகோவை: கோவையில் கார் சிலிண்டர் வெடித்த வழக்கில் கைதானவர்களில் 5 பேரை 9 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து என்ஐஏ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அவர்களது வீடுகளுக்கு நேரில் அழைத்து சென்று சோதனை செய்து வருகின்றனர். கோவை உக்கடம் கோட்டை சங்கமேஸ்வரர் கோயில் முன்பு கடந்த அக்டோபர் மாதம் 23ம் தேதி கார் வெடித்ததில் ஜமேஷா முபின்(29) பலியானார். இது தொடர்பாக உக்கடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். பின்னர் ஜமேஷா முபின் வீட்டில் நடைபெற்ற சோதனையில் 75 கிலோ வெடிபொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
அதன் பின்னர் சதித்திட்டம் தீட்டியதாக அவரது கூட்டாளிகள் முகமது அசாருதீன்(25), முகமது தல்கா (25), முகமது ரியாஸ்(27), பெரோஸ் இஸ்மாயில் (28), முகமது நவாஸ் இஸ்மாயில் (26), அப்சர்கான்(24) ஆகிய 6 பேரை உபா பிரிவில் வழக்கு பதிவு செய்து போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை என்ஐஏ-விடம் ஒப்படைக்கப்பட்டது.
கோவை அவிநாசி ரோட்டில் உள்ள போலீஸ் பயிற்சி மைதானத்தில் 2 அறைகள் ஒதுக்கப்பட்டு என்.ஐ.ஏ அலுவலகம் துவங்கப்பட்டுள்ளது. என்ஐஏ டிஐஜி வந்தனா தலைமையில் எஸ்பி ஸ்ரீஜித் மேற்பார்வையில் இந்த விசாரணை நடைபெற்று வருகிறது.
விசாரணை அதிகாரியாக என்ஐஏ இன்ஸ்பெக்டர் விக்னேஷ் நியமிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பான வழக்கு விசாரணை சென்னை பூந்தமல்லி நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. எனவே வழக்கு விசாரணைக்கு ஏதுவாக கைதானவர்கள் புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர்.
இதற்கிடையே கைதானவர்களில் பெரோஷ்கான், உமர் பாரூக், முகம்மது அசாருதீன், அப்சர்கான், பெரோஸ் ஆகிய 5 பேரை காவலில் எடுத்து விசாரிக்க என்ஐஏ அதிகாரிகள் பூந்தமல்லி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். கடந்த 21ம் தேதி வழக்கை விசாரித்த நீதிபதி 5 பேரையும் 9 நாட்கள் காவலில் விசாரிக்க உத்தரவு பிறப்பித்தார்.
இதனைத்தொடர்ந்து 21ம் தேதி முதல் நேற்று வரை சென்னையில் 5 பேரிடமும் விசாரணை நடத்தினர். பின்னர் 5 பேரும் நேற்று இரவு கோவை அழைத்து வரப்பட்டனர். பிஆர்எஸ் மைதானத்தில் உள்ள என்ஐஏ அலுவலகத்தில் விசாரணை நடைபெற்றது.
தொடர்ந்து இன்று காலை கோவை உக்கடம் ஜி.எம்.நகர், கரும்புக்கடை, கோட்டைமேடு, அல் அமீன் காலனி போன்ற பகுதிகளில் உள்ள 5 பேரின் வீடுகளுக்கு அவர்களை நேரில் அழைத்து சென்று விசாரணை நடத்தி சோதனை செய்தனர். அதன் அடிப்படையில் இந்த வழக்கில் மேலும் சிலர் சிக்குவார்கள் எனக் கூறப்படுகிறது.
TELEGRAM: t.me/agnipuratchi1
No comments:
Post a Comment